யாழில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

363 0

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவர்களில், யாழ். போதனாவைத்தியசாலையின் மருத்துவர்கள் இருவரும் தாதியர்கள் மூவரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 634 பேரின் மாதிரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள் இருவர், தாதிய உத்தியோகத்தர்கள் மூவர், சுகாதார ஊழியர்கள் நால்வர், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவர் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், நகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.