அமைச்சர் ஜொன்ஸ்டன் 2 வழக்குகளில் இருந்து விடுதலை

307 0

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்து அவர்களை விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சதொச ஊழியர்கள் 153 பேரை, அவர்களின் உத்தியோகபூர்வ கடமையில் இருந்து விலக்கி வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது கொழும்பு பிரதான நீதவான் புத்திக்க ஶ்ரீ ராகலவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரான எராஜ் பெர்ணான்டோ மற்றும் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளரான மொஹமட் சாகீர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றிற்கு எதிராக ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ சமர்ப்பித்த திருத்தப்பட்ட மனுவொன்றை பரிசீலனை செய்த கொழும்பு மேல் நீதிமன்றம் இலஞ்ச ஆணைக்குழுவால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள முறை சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளித்தது.

குறித்த தீர்ப்பின் படி நீதவானால் குறித்த பிரதிவாதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.