’காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்’

304 0

காணி தொடர்பான பிணக்குகளை இலகுவாக தீர்த்துவைப்பதன் ஊடாக, இனங்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரைவாக ஏற்படுத்தமுடியுமென சிறந்த எதிர்காலத்துக்கான உள்ளூர் முயற்சிகள் (லிவ்ட்) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் தெரிவித்தார்.

“சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் காணி பிணக்குகளுக்கான விசேட மத்தியஸ்த முயற்சிகள்” என்னும் தொனிப்பொருளிலான இரண்டு நாள் செயலமர்வு, மட்டக்களப்பில் நேற்று (25) ஆரம்பமானது.

லிவ்ட் அமைப்பின் ஏற்பாட்டில், நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மத்தியஸ்த சபையின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான செயலமர்வாக இந்தச் செயலமர்வு நடைபெறுகின்றது.

பொலிஸ் நிலையங்களால் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்படும் வழக்குகள், மத்தியஸ்த சபை ஊடாக தீர்த்துவைப்பதற்காக அனுப்பிவைக்கப்படும் நிலையில், அவ் வழக்குகளை விரைவாகவும் சமூக முரண்பாடுகள் ஏற்படாமலும் தீர்த்துவைப்பதற்கு மத்தியஸ்த சபை தலைவர்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலான திரண் அபிவிருத்தியை நோக்காக கொண்டு இச்செயலமர்வு நடத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் அனைத்து மத்தியஸ்த சபைகளை பலப்படுத்தி, அதன் சேவைகளை விரிவுபடுத்தவும் அதன்மூலம் மக்கள் விரைவாகவும் சிறப்பாகவும் பயனடையும் வகையில் செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லும் வகையில் அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு லிவ்ட் அமைப்பு செயற்படவுள்ளதாகவும் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜானு முரளிதரன் தெரிவித்தார்.