பெருந்தோட்ட காணிகளை வெறுத்தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு, தற்போது இருக்கின்ற தடையை நீக்க, புதிய அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்க அரசு ஏற்பாடு செய்து வருகின்றது. பெருந்தோட்டத்துறை சார்ந்த, அரசில் உள்ள, எமது பிரதிநிதிகள் தடுத்து நிறுத்துவார்களா? என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற, பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழுவின் இரண்டாவது கூட்டத்தில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், கூட்ட முடிவில் பின்வருமாறு தெரிவித்தார்.
“பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழுவின் இரண்டாவது கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதிலே அரசை பிரதிநித்துவப்படுத்தும், மாத்தளை தொடக்கம் மாத்தறை வரையான சகல எம்பீக்களும் பல்வேறு தேவைகளுக்கு தோட்ட காணிகளை எடுப்பது தொடர்பிலேயே பேசினர்.
கிராம விரிவாக்கம், நகர விரிவாக்கம், பல்கலைக்கழக விரிவாக்கம் என ஒரு சாரார், இன்னும் ஒரு சாரார், பயிரிடப்படாத காணிகளை வெளியாருக்கு விவசாயத்திற்கு வழங்க வேண்டும் என்கின்றனர். மொத்தத்தில் பெருந்தோட்ட காணிகளை வேறு தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அரசை சார்ந்த பல எம்பீக்களும் பெருந்தோட்ட காணி சுவீகரிப்பு இழுத்தடிப்பாக உள்ளது என குறைகூறினர். அமைச்சரை நேரடியாக தலையிட்டு, விரைவாக தோட்ட காணிகளை எடுக்கும் வழிமுறையை செய்து தருமாறு கேட்டனர்.
அதன் போது, தற்போதுள்ள சட்ட சிக்கலை நீக்கி, பெருந்தோட்ட காணிகளை விரைவாகவும், இலகுவாகவும் வேறு தேவைகளுக்கு எடுக்கக்கூடிய வகையில் அமைச்சரவை பத்திரமொன்று முன்வைக்கப்படுமென கூறப்பட்டது. மொத்தத்தில் எதிர்வரும் நாட்களில் பெருந்தோட்ட காணிகளை காப்பாற்றிக்கொள்வது பெரும்மொரு சவாலாக மாறப்போகிறது.
அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் எமது பிரதிநிதிகள், இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பார்களா என தெரியவில்லை. இவ் அமைச்சரவை ஆலோசனை குழு கூட்டத்தில், அரச பக்கமாக பெயரிடப்பட்டிருந்த மலையக பிரதிநிதி பிரசன்னமாகியும் இருக்கவில்லை. இவ்வாறு மெளனமாக இருந்துவிட்டு, இறுதியில் காணிகளை எடுப்பதற்கு நியாமாம் கூற முற்படுவார்கள் என்ற நிலையே வெளிப்படுகின்றது.” என்றார்.