மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. கொரோனா பரவல் எதிரொலியாக இணையதளத்தில் நேரலையில் தேரோட்டம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணி அளவில் சாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர். 8.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு கிழக்கு மாடவீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ண மடம் சாலை, வடக்கு மாட வீதி வழியாக மீண்டும் கிழக்குமாட வீதி வழியாக தேர் நிலைக்கு வந்தடைகிறது. மாலையில் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடக்கிறது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக தேரோட்டத்தை பொதுமக்கள் வீட்டில் இருந்து பார்க்கும் வகையில் https://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற ‘யூடியூப்’ சேனலில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருஞானசம்பந்த சாமிகள் எழுந்தருளலும், பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2.45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் கபாலீசுவரர்- கற்பகாம்பாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசவருடன் மாட வீதிகளில் வலம் வருகின்றனர்.
அவர்களுடன் திருவள்ளுவர்-வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பலரும் சேர்ந்து கொண்டு வீதி உலா வருகின்றனர். தொடர்ந்து 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவில் 10 நாட்களிலும் பகல், இரவு காலங்களிலும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சிகள் மற்றும் இரவு 6.30 மணிக்கு விடையாற்றி சொற்பொழிவுகளும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை-ஆணையர் த.காவேரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.