அமெரிக்காவில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் விவேக் மூர்த்தி நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல்

383 0

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் மருத்துவத்துறை தலைவராக பணியாற்றியவர் விவேக் மூர்த்தி.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோபைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அவர் தனது அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை நியமனம் செய்தார்.

அந்த வகையில், அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தியை, அதிபர் ஜோபைடன் நியமனம் செய்தார்.

அரசு நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுபவர்களுக்கு அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்த நிலையில் விவேக் மூர்த்தி நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. அவருக்கு 57 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். எதிராக 43 பேர் வாக்களித்தனர்.

இதற்கு முன்பு விவேக் மூர்த்தி, முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் மருத்துவத்துறை தலைவராக பணியாற்றினார். அதன்பின் 2017-ம் ஆண்டு அப்போதைய அதிபர் டிரம்பால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவேக்மூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘உங்களின் சர்ஜன் ஜெனரலாக மீண்டும் பணியாற்ற செனட் சபை உறுதிப்படுத்தியதற்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு ஆண்டாக ஒரு தேசமாக நாம் பெரும் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம். நமது தேசம் மீண்டு வரவும் சிறந்ததை உருவாக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்கி இருக்கிறேன். நமது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்’’ என்று கூறி உள்ளார்.