வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 284 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போதே 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியிலுள்ள கடைகளின் வியாபாரிகளும் அடங்குகின்றனர்.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இவர் மண்டைதீவுக்கு கடலுணவு வாங்கச் சென்றவர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
யாழ்ப்பாணம் மருத்துவபீட மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐவர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் மூவர் புதுக்குடியிருப்பிலும், இருவர் மல்லாவியிலும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.
கிளிநொச்சி பளையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் நால்வரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
இதேவேளை, வவுனியா பொது வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் ஒருவர் உயிரிழந்தார் என்று மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.