முடங்கும் நிலையில் யாழ் குடாநாடு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

395 0

 

தற்போது யாழ்குடா நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து வர்த்தகர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, சுகாதார நடைமுறைகளை பின்பற்றிச் செயற்படவேண்டும் என யாழ். வணிகர் கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ். நகரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளமை தொடர்பில் இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே ஆர்.ஜெயசேகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ். நகர் சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது 9 பேர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

தற்போது பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் வியாபார நடவடிக்கைகளுக்கு செல்லும்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளிகளை பேணி தமது வியாபார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்தோடு வியாபார நிலைய உரிமையாளர்கள் மற்றும் வியாபார ஸ்தானங்களில் கடமையாற்றுவோர் ஏற்கனவே சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலமே இந்த கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தற்போதைய நிலையில் கொரோனா தொற்று நிலைமை யாழ்குடா நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே யாழ் குடாநாட்டை முடக்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.

இதனால் பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.