வடக்கில் பெரும்பான்மையினர் குடியேற்றம்! – கஜேந்திரன் கண்டனம்

400 0

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் காணிகளை இழந்த நிலையில் இருக்கின்றபோது வடக்கின் இன விகிதாசாரத்தையும், இனப்பரம்பலையும், மாற்றியமைக்கும் விதமாக பெரும்பான்மையினத்தவர்களுக்கு காணிகள் வழங்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சுங்கக்கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக சுகாதாரத் துறையிலே பல வருடங்கள் கடமையாற்றியபோதும் நிரந்தர நியமனங்கள் கிடைக்காத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சுகாதாரத் தொண்டர்கள் 15 வருடங்களுக்கும் மேலாக சுகாதாரத் துறையிலே பணியாற்றியவர்கள்.

வைத்தியசாலைகளில் அவர்கள் மிகவும் அடிமட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். அவ்வாறிருந்த போதும் கடந்த காலங்களில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது இவர்கள் புறக்கணிக்கப்பட்டு அரசியல் தலையீடுகள் அடிப்படையில், செல்வாக்குகளின் அடிப்படையில், முன்னர் இந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்காதவர்கள், சில கட்சித் தலைவர்களின் செல்வாக்குகளின் அடிப்படையில் நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஆனால், நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணிபுரிந்தவர்கள் இன்று வீதிகளில் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது ஒரு சிலர் தீக்குளித்து தற்கொலைக்கும் முயன்றுள்ளனர். எனவே, இவர்களின் பிரச்னை கவனத்தில் கொள்ளப்பட்டு அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்.

சுதந்திரக்கட்சியைச் சார்ந்தவர்களும் ஈ.பி.டி.பியைச் சார்ந்தவர்களும் தங்களுக்கிடையிலான ஏட்டிக்கு போட்டி காரணமாக இந்த சுகாதாரத் தொண்டர்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை காணிச் சீர்திருத்தக்குழுவின் காணிகள் வடக்கில் பளைப் பகுதியில் அந்த பிரதேசத்தையோ ஏன் வடக்கையே சாராதவர்களுக்கு குறிப்பாக வெளி மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களுக்கு குறிப்பாக பொலிஸாருக்கு 5 ஏக்கர்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் காணிகள் இல்லாமல் இருக்கின்றபோது, இவ்வாறு அந்த பிரதேசத்தின், மாகாணத்தின் இன விகிதாசாரத்தை, இனப்பரம்பலை, மாற்றியமைக்கும் விதமாக இந்தக்காணிகள் பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்படுவதை நாம் கண்டிக்கின்றோம்.

அந்த பிரதேச செயலாளருக்குத் தெரியாமல், அதிகாரிகளுக்குத் தெரியாமல் அநுராதபுரத்திலிருந்து வந்த முடிவுகளின் அடிப்படையிலே வடக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்படும் இந்தச் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு முறைகேடான முறையில் வழங்கப்பட்ட காணிகள் மீண்டும் திரும்பப்பெறப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.