இலங்கை மீதான ஐ.நா.வின் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு கனடா உதவும் – மார்க் கார்னியோ

408 0

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை அங்கு இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ அறிக்கை ஒன்றினை வெளியிட்டு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் குறித்த பிரேரணை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்த சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார்.

இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சபை உறுப்பினர்களுடன் இணைந்து கனடா பணியாற்றியது என்றும் மார்க் கார்னியோ சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை கட்டாயப்படுத்துவதன் மூலம் இலங்கையில் பொறுப்புக்கூறலை புதிய தீர்மானம் முன்வைக்கிறது.

ஆகவே எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கு இந்த ஆணை முக்கியமானதாக இருக்கும் என்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் மனித உரிமைகள் தொடர்பான கடமைகளை நிலைநிறுத்தவும், தண்டனையை முடிவுக்கு கொண்டுவரவும், ஒரு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையை மேற்கொள்ளவும் கனடா இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானம் இலங்கைக்கு பாதுகாப்பான, அமைதியான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு படியாகும் என சுட்டிக்காட்டிய அவர், இந்த இலக்கை நோக்கிச் செல்லும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க கனடா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.