ஐ.நா.வில் தங்கள் கொள்கைகள் தோற்கடிக்கப்பட்டதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி

318 0

அரசாங்கம் தனது பெருமையை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களின் கொள்கைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தோற்கடிக்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இந்த அரசாங்கம் தற்போது மனித உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதன்பிரகாரம் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை இரத்து செய்தல், இராணுவ மயமாக்கல் மற்றும் ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் நாட்டின் அரசியலமைப்பின் படி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையை இழந்த நிலையிலும் அவர்களின் குறைபாடுகளை ஒப்புக் கொள்ள இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.