சட்டவிரோத பண பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேர் கைது

298 0

201612180357140169_illegal-exchange-of-old-notes-cbi-arrests-2-rbi-officials-in_secvpfசட்டவிரோதமாக மாற்றி புதிய 2,000 ஆயிரம் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வழங்கியதாக பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

ரூ.1.99 கோடிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி புதிய 2,000 ஆயிரம் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வழங்கியதாக பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

உயர் மதிப்பு கொண்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் பணம் எடுக்க வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி நீண்ட வரிசையில் நின்றாலும் போதுமான அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் செயல்படாமலேயே உள்ளன.

நிலைமை இப்படி இருக்க பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கர்நாடக அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கின. இந்த ரூபாய் நோட்டு மோசடியில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒருசில வங்கி அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுனில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு வங்கி காசாளர் பரசிவமூர்த்தி ரூ.1.51 கோடிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்கி கமிஷன் அடிப்படையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்ததாக தெரிய வந்தது. இதுதொடர்பாக பரசிவமூர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ரூ.1.51 கோடிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி கொடுத்ததில் பெங்களூரு ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக இருந்த மைக்கேல் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, மைக்கேலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி கொடுத்ததில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கியில் அதிகாரிகளாக பணியாற்றும் சதானந்த நாயக், ஏ.கே.கவின் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் ரூ.1 கோடியே 99 லட்சத்துக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி கொடுத்தது தெரியவந்து உள்ளது. இவர்கள் மீது குற்றச்சதி, மோசடி, லஞ்ச ஒழிப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஏற்கனவே கைதான மைக்கேலுடன் சேர்ந்து சதானந்த நாயக், ஏ.கே.கவின் சட்டவிரோதமாக பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்ததாகவும் தெரிய வந்து உள்ளது. கைதான 2 பேரிடம் இருந்து பணம் எதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை.

ஆனால் அவர்கள் 2 பேரும் சட்டவிரோதமாக பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தது மட்டும் தெரியவந்துள்ளது. இதனால் கைதான சதானந்த நாயக், ஏ.கே.கவினிடம் மேலும் விசாரிக்க வசதியாக அவர்களை தங்கள் காவலில் எடுக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அவர்களை பெங்களூரு சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 21-ந் தேதி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்தனர். தற்போது சதானந்த நாயக், ஏ.கே.கவின் ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பெங்களூருவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட தகவலை டெல்லியில் சி.பி.ஐ. அமைப்பின் செய்தி தொடர்பாளர் தேவ்பிரீத் சிங் நிருபர்களிடம் தெரிவித்தார்.