வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை

331 0

வங்காளதேச வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருக்கும் நபர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஷேக் ஹசீனா ஆவார்.

வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைமையில் ஆட்சி நடக்கிறது. பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். இவர் வங்காளதேச வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருக்கும் நபர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

இந்த சூழலில் கடந்த 2000-ம் ஆண்டில் ஷேக் ஹசீனா தனது கோபால்கஞ்ச் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஷேக் ஹசீனாவை படுகொலை செய்ய திட்டம் தீட்டி பயங்கரவாதிகள் வெடி குண்டு வைத்தது தெரியவந்தது.

ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேருக்கு மரண தண்டனையும், 9 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் டாக்கா ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 14 பயங்கரவாதிகள் மீதான விசாரணை டாக்கா விரைவு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முடிந்தது.

இதில் பயங்கரவாதிகள் 14 பேர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்கள் 14 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.