அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பிரத்யேகமாக புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சமூகத்தின் மற்றொரு அங்கமாக இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனிலும் அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் மிகப்பெரிய சுற்றுலா பகுதியாக திகழும், அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகள் விளையாடும் வகையில் புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,648 சதுர மீட்டர் பரப்பளவில் மாற்றுத்திறனாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் விளையாடும் வகையில் உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ற வகையில் விளையாட முடியும். மேலும் அவர்கள் தங்களது உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள உதவுவதுடன், சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இருக்கும்.
இங்கு கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்டவற்றை விளையாடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடும் வகையில் மைதானமும் உள்ளது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் சர்வதேச தரத்துக்கு இணையாக இங்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள விளையாட்டு மைதானங்களில் மாற்றுத்திறனாளிகள் கீழே விழுந்தாலும் அடிபடாத, காயங்கள் ஏற்படாத வகையில் ரப்பர் தரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விளையாடும் இடங்களில் வெயில் உள்ளிட்டவற்றால் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகளுக்காக 22 லட்சம் திர்ஹாம் நிதி செலவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் எளிதில் இந்த இடத்துக்கு வந்து செல்லும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர்கள் தங்களது கார்களை நிறுத்திக் கொள்ளவும் வசதியுள்ளது.
பல்வேறு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழும் அபுதாபி கடற்கரை பகுதி இனி மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறந்த சுற்றுலா தலமாக அமையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.