தி.மு.க. தொண்டர்கள் என் கார் மீது செருப்பு வீசினர்: வைகோ குற்றச்சாட்டு

310 0

201612180519551878_dmk-volunteers-threw-shoes-and-stone-on-my-car-vaiko-charge_secvpfதி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பவரால் தூண்டி விடப்பட்ட தி.மு.க. தொண்டர்கள் என் கார் மீது செருப்பு வீசினர் என்று வைகோ குற்றம் சாட்டினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று இரவு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை பார்க்க வேண்டும் என முடிவு செய்து, கலிங்கப்பட்டியில் நாளை(இன்று) நடத்த திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, மதுரையில் இருந்து மாலை 5 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்தேன். மாலை 6.15 மணியளவில், ஆஸ்பத்திரியில் கருணாநிதியுடன் இருந்த கனிமொழியிடம் தலைவரை பார்க்க வருகிறேன். ஒரு நிமிடம் அவரை பார்க்க முடியுமா? என கேட்டேன்.

அதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறினார். ராகுல்காந்தி பார்த்து இருக்கிறாரே! என்று கூறிவிட்டு, பரவாயில்லை அவரை பார்க்க முடியாவிட்டாலும் உங்களையும், உங்கள் தாயார் மற்றும் சகோதரர்களை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு செல்கிறேன். இன்னும் 40, 50 நிமிடங்களில் வருவேன் என்று கூறினேன்.

எனவே, நான் கருணாநிதியை பார்க்க வரப்போவது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். மல்லை சத்யா, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மாவட்ட செயலாளர் ஜீவன் உள்பட 7 மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் கார்களில் புறப்பட்டு சென்றோம். நான், மல்லை சத்யா, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மட்டும் தான் மருத்துவமனைக்குள் செல்வது என திட்டமிட்டு, முதல் காரில் அமர்ந்து சென்றோம்.
நாங்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு தி.மு.க.வின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் தொலைபேசி ஏற்பாட்டின் பேரில் திடீரென சுமார் 70 பேர் அங்கு குவிக்கப்பட்டனர். எங்கள் கார் ஆஸ்பத்திரியை நெருங்கும் போது, கற்களும், செங்கலும், சின்ன சின்ன மரக்கட்டைகளும் கார் மீது எறியப்பட்டன. நல்ல வேளையாக கண்ணாடி உடையவில்லை.

எனக்குள் ஒரே ஒரு பயம் இருந்தது. அதாவது என்னுடன் வந்த தொண்டர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் வந்துவிடக்கூடாது என பயந்தேன். நான் எங்கள் தொண்டர்களை பார்த்து, அவர்கள் நம்மை அடித்தாலும் பரவாயில்லை, நாம் திரும்பி சென்றுவிடுவோம் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம்.

இந்த சம்பவம், ஆஸ்பத்திரிக்குள் இருந்த கருணாநிதியின் குடும்பத்தினருக்கு தெரியாது. பின்னர் நடந்த சம்பவம் குறித்து மு.க.அழகிரி, கனிமொழி, மு.க.தமிழரசன், சகோதரி செல்வி ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர். ஆனால், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடந்த சம்பவத்துக்கு வருத்தப்படுவதாக செய்தி கொடுத்து இருப்பதாக கேள்விபட்டேன்.

எனது தாயார் மாரியம்மாள் இறந்த போது, சகோதரி கனிமொழி துக்கம் கேட்க வந்தார். மு.க.ஸ்டாலின் வந்தபோது அவரை மிக மரியாதையாக அழைத்து சென்று, என் தாயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்த பின் வீட்டுக்குள் அழைத்து சென்று கவுரவமாக நடத்தி, பின்னர் வெளியில் வந்து மிக கவனமாக காருக்கு அனுப்பி வைத்தேன்.

நான் நல்லது மட்டுமே நினைப்பவன். என் ரத்தத்தில் நன்றி உணர்வு உண்டு. அவர்(கருணாநிதி) உடல் நலத்துடன் இருக்க வேண்டும், கஷ்டப்படக்கூடாது என விரும்புகிறேன். பார்க்க ஆசைப்பட்டேன். அவர் நல்ல குணம் அடைந்து மீண்டும் எழுத்துப்பணி, அரசியல் பணிக்கு திரும்ப வேண்டும்.

29 ஆண்டுகளாக அவர்(கருணாநிதி) மீது ஒரு துரும்பு கூட விழ சகிக்காதவனாக வாழ்ந்தவன். தி.மு.க.வில் இருக்கும் உண்மை தொண்டர்கள் தூண்டி விடப்பட்டு, நான் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என இந்த சம்பவம் நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.