எங்கள் வரலாற்றை திரிபு செய்யாதீர்கள்-ந. மாலதி

752 0

உண்மையும் அர்பணிப்பும் கலந்த வீரத்துடன் வரலாற்றை தரிசித்தவர்களை விட அதை பதிவுசெய்வதற்கு சிறந்தவர்கள் இருக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி வரலாற்றை எழுத வேண்டியவர்களின், அதை எழுதும் வல்லமையும் உள்ளவர்களின் கைகளை கட்டிப்போடும் சூழல் உலகில் பல இடங்களில் அன்றும் நிலவியது இன்றும் நிலவுகிறது என்றுதான் நான் உலகத்தை புரிந்து வைத்திருக்கிறேன். அதை கோடிட்டு காட்டுவது போன்ற ஒரு அனுபவம் அண்மையில் எனக்கு கிடைத்தது. அதுதான் அம்பிகா சீவரட்டினத்தின் 16 நாட்கள் உண்ணாவிரத போராட்டமும் அதன் முடிவில் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் சொன்ன ஒரு கருத்தும்.

அவருடைய போராட்ட பின்னணியும் அதை நடத்தியவர்களின் அரசியலும் ஏனைய பிறவும் பலராலும் பேசப்பட்டிருக்கிறது. அது பற்றியது அல்ல இந்த பதிவு. திலீபனின் உண்ணாவிரதம் பற்றி அம்பிகா சீவரட்டினமும் அவரைச் சார்ந்தவர்களும் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்கள். அதாவது பொதுமக்களின் பெயர்களும் அடங்கிய ஒரு குலுக்கலிலேயே திலீபன் உண்ணாவிரதம் இருக்க தெரிவு செய்யப்பட்டார் என்பதே அவர்கள் சொல்லியிருக்கும் கருத்து. அது பற்றியதே இப்பதிவு.

இந்திய இராணுவம் தாயகத்தில் கால் பதித்திருந்த காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து திலீபனுடன் பணியாற்றிய மூத்த பெண் போராளிகள் பலர் எம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அம்பிகா சீவரட்டினமும் அவரைச் சார்ந்தவர்களும் திலீபனின் உண்ணாவிரத போராட்டம் பற்றி சொன்ன கருத்து ஒரு வரலாற்று திரிபு என்பதை திலீபனுடன் பணியாற்றிய இவர்களும் பல மூத்த ஆண் போராளிகளும் பல ஆதாரங்களை முன்வைத்து நிறுவுகிறார்கள்.

திலீபனின் உண்ணாவிரத போராட்டம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படவில்லை. அதுவும் பொது மக்களின் பெயர்களையும் சேர்த்து, உண்ணாவிரதம் இருப்பதற்கு குலுக்கல் முறையில் ஒருவரை தெரிவு செய்வது என்பது விடுதலைப்புலிகளின் அன்றைய செயற்பாட்டில் நிச்சயமாக இருக்கவில்லை என்பதை இம்மூத்த போராளிப் பெண்கள் ஆணித்தரமாக சொல்கிறார்கள். திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அவருடன் நின்ற சில ஆண் போராளிகளுடனும் இவர்கள் உண்மையை தேடி தொடர்பு கொண்டார்கள். அவர்கள் எல்லோருடைய கருத்தாகவுமே இது இருக்கிறது என்பதையும் இவர்கள் சொன்னார்கள்.

திலீபன் தானாகவே உண்ணாவிரதம் இருப்பதற்கு முடிவு செய்தார். தலைவரிடம் சென்று அதற்கான அனுமதியையும் பெற்றார். தனது உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள் உரையில் அவரே இதை சொல்லியிருக்கிறார்.

அம்பிகா சீவரட்டினத்துடன் நின்றவர்கள் சொல்லியிருக்கும் குலுக்கல் முறைபற்றிய கருத்தானது விடுதலைப்புலிகள் பொதுமக்களை பலிக்கடாவாக்கும் செயல்வடிவத்தை பின்பற்றியவர்கள் என்ற கருத்தை மறைமுகமாக சொல்கிறது. இன்று மேற்குலகமும் சிங்கள தரப்பும் பிரபலமாக்க முயற்சிக்கும் கருத்தும் இதுதான். வருங்கால சந்ததியினர் இந்த வரலாற்று திரிபு என்ற பயங்கரமான குழியில் விழுந்துவிடும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கும் சூழலில் உண்மையை தரிசித்தவர்களின் கைகள் கட்டிப்போடப்பட்டிருக்கும் சூழலில் இப்படியான வரலாற்று திரிபுகளை எடுத்துச் சொல்வது வரலாற்றை பேசத் துணிபவர்களின் கடமையுமாகும்.

அதே நேரம், மட்டக்களப்பில் இடம்பெற்ற அன்னை பூபதியின் உண்ணாவிரத போராட்ட சூழல் சிறிது வேறுபட்டது. திலீபனின் தியாகம் 1987 செப்டம்பரில். அன்னை பூபதியின் தியாகம் ஏப்பிரல் 1988 இல் எட்டு மாதங்களின் பின் நடந்தது. இடைப்பட்ட காலத்தில் இந்திய இராணுவத்தின் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களின் காரணமாக அன்னையர் முன்னணி என்ற ஒரு பொதுப்பெண்கள் அமைப்பு எழுச்சியுடன் அன்று இயங்கியது. அன்னையர் முன்னணி இந்திய இராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியது. அதிகாரத்தில் இருந்த பலருக்கு நடந்துகொண்டிருந்த அட்டூழியங்கள் பற்றி கடிதங்கள் கையளித்தார்கள். அதனால் எதுவித மாற்றமும் வராததால் ஆத்திரம் அடைந்த மட்டக்களப்பு அன்னையர் முன்னணியில் இருந்த பெண்கள் ஒரு கூட்டத்தை கூட்டினார்கள்.

அக்கூட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது தன்னை இதற்காக முன்னிறுத்தியவர்கள் அன்னம்மா டேவிட் அன்னையும், பூபதி அன்னையும். இருவரும் உண்ணாவிரதம் இருப்பதற்கு உறுதியாக நின்றதால் அன்னையர் முன்னணி குலுக்கல் முறையில் அன்னம்மா டேவிடை தெரிவு செய்தது. அன்னம்மா டேவிட் அவர்கள் அவரின் சுயவிருப்புக்கு மாறாக உண்ணா நோன்பு இருப்பதாகக் கூறி இந்திய இராணுவம் பலவந்தமாக அவரை தூக்கிச்சென்று வைத்தியசாலையில் போட்டது. இதைத் தொடர்ந்து “நான் எனது சுயவிருப்பத்தின் பேரிலேயே எனது கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாநோன்பு இருக்கிறேன் யாரும் என்னைத் தடுக்கக் கூடாது” என அன்னையர் முன்னணியிடம் எழுதி ஒப்படைத்துவிட்டு அன்னை பூபதி தனது உண்ணா நோன்பை ஆரம்பித்தார். அவருயை உண்ணாவிரதத்தை அன்னையர் முன்னணி முன்னின்று நடத்தியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் விடுதலைப்புலிகள் நேரடியாக தலையிடவில்லை என்பதையும் மூத்த போராளிகள் பதிவு செய்கிறார்கள்.

தமிழீழ மக்கள் ஆழமாக போற்றும் போராட்ட வரலாற்றை இனிமேலும் திரிபு செய்ய வேண்டாம் என்பதே போராளிகளினதும் மக்களினதும் கருத்தாகவும் வேண்டுகோளாகவும் இருக்கிறது.
ந மாலதி