உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே என்றும், அது சிறிலங்கா அரசாங்கத்தின் இறுதியான நிலைப்பாடு அல்ல என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மங்கள சமரவீர
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விடயம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன.எனினும் இதுபற்றி நாம் இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.உள்நாட்டு பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கமாட்டோம் என்று சிறிலங்கா அதிபர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.
சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில், சிறிலங்கா அதிபருக்கும் தனது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது. அவரது கருத்தை மதிக்கிறோம்.ஆனால் இறுதியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்த விடயத்தில் உள்ள தெரிவுகளை ஆராய்ந்து இறுதி முடிவை எடுப்பார்கள்.சம்பந்தப்பட்ட தரப்பினரில் பெரும்பான்மையானோரால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய முடிவாக அது இருக்கும்.
இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் பல மாற்று வாய்ப்புகளும் இருக்கின்றன. நாம் அவற்றையும் கருத்தில் கொள்ளுவோம்.இந்த விடயத்தில் முக்கியமானது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாகும். இது எமக்கு திருப்தியை அளிப்பதாக மட்டும் இருக்கக் கூடாது.சம்பந்தப்பட்டவர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டியது முக்கியம். இந்த விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்படும் என்று நம்புகிறேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.