ஏப்ரல் 21 நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் பேராயர் எச்சரிக்கை

262 0

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ள சந்தேகநபர்களை, தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஈராண்டுகள் பூர்த்தியாகும் ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாவிடின், நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் வெடிக்கும் என்று, கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தி, ராகம – தேவத்த பெசிலிக்கா தேவாலயத்தில் நேற்று (22) நடைபெற்ற விசேட வழிபாட்டு நிகழ்வின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த பேராயர், குறித்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையாயின், 21ஆம் திகதியன்று, நாடு முழுவதும் பலம்வாய்ந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு, எந்தவொரு தயவு தாட்சன்யமின்றியும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள கார்டினல், சந்தேகநபர்களை உரிய முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அந்த நடவடிக்கைகள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஈராண்டுகள் பூர்த்தியாகும் ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான அழுத்தங்கள், சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்கும் வரையில், மக்களுடன் இணைந்து தான் போராடுவதாகவும், பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.