நிலை மாறும் உலகில் – ஒரு மேற்கத்தேய நோக்கு!

378 0

trump-m1இறுதியாக வெளிவந்த டைம்ஸ் சஞ்சிகையின் அட்டைப்படத்தில், புதிய அமெரிக்க அதிபராகத் தெரிவுசெய்யப்பட்ட ட்ரம்ப் அவர்களின் படத்தை டைம்ஸ் என்ற சொல்லில் வரும் “எம்” எழுத்தின் மத்தியில், அவரது தலையை வர வைத்ததன் மூலம் திருவாளர் ட்ரம்ப் அவர்களை ஒரு அசுரக்கோலத்தில் காட்ட முற்பட்டதான ஒரு பார்வை உள்ளது.

கடந்த கால அமெரிக்க தலைவர்களின் பொதுவான பார்வையான, அமெரிக்காவை உலக தலைமைத்துவத்தை கையாளும் போக்கை கொண்டதான பார்வையிலிருந்து சற்று மாறுபட்டதான போக்கை கொண்டதாக காட்டும் பாணியில் டைம்ஸ் சஞ்சிகையின் அட்டைப்படம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட ட்ரம்ப் அவர்கள் தனது ஆட்சியில் அசுரத்தன தீர்மானங்களை எடுக்க வல்லவர் என்பதை இந்த அட்டைப்படம் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்க அதிபர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் போது அவரது ஆலோசனைக் குழுவிலும் அரசாங்க பதவியிலும் யார் யார் எந்த பதவிக்கு தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

அடுத்த நான்கு வருட ஆட்சியில் இந்த செயலர்கள் உலகின் போக்கில் மிக முக்கிய திருப்புமுனைகளை உருவாக்கக் கூடிய தீர்மானங்களை எடுப்பவர்களாக இடம்பெறுவார்கள். இதிலே இறுதியாக தெரிவு செய்யப்பட்ட இராஜாங்கச் செயலர் பதவி இவை எல்லாவற்றிக்கும்  மிக முக்கியமானதாக  பார்க்கப்படுகிறது.

trump-m1

EXXON MOBIL எரிபொருள் நிறுவன தலைமை அதிகாரி றெக்ஸ் ரில்லசன் இராஜாங்கச் செயலர்  பதவியில் அமர்த்தப்பட்டிருப்பதானது, தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க அதிபரின் வெளியுறவுக் கொள்கையின் பண்புகளை சற்று வெளிக்கொண்டு வருவதாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யத் தலைவர் புட்டின் அவர்களுடன் மிக நெருக்கமான ஒருவர் ரில்லசன் என்பதால் ட்ரம்ப் அவர்களின் எதிர்பார்ப்பு. ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதே என்பதை எடுத்து காட்டுவதாக உள்ளது.

இராஜாங்கச் செயலராக, ரஷ்ய தலைவர் புட்டின் அவர்களின் நண்பர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், அமெரிக்க வெளியுறவு கொள்கை குறித்த சமிக்ஞைகள் வெளிவர தொடங்கி இருப்பதாக கணிப்பிடும் பத்திரிகைகள். ஐஎஸ் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான போக்கு, ஈரான் மீதான ஐயம் சார்ந்த போக்கு ஆகியவற்றுடன், சிரியாவில் ரஷ்ய படைகள் நிலை குறித்த மென்மையான போக்கு ஆகியவற்றை எதிர்பார்ப்பதாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

அதேவேளை ரில்லசன் அவர்களின் தெரிவு குறித்து ரஷ்யத் தலைவர் புட்டின் மகிழ்ச்சியை தெரிவித்ததுடன் தெரிவு-செய்யப்பட்ட அமெரிக்கத் தலைவர் ட்ரம்ப் அவர்களை எந்த நேரமும் சந்தித்து கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும்  கூறியுள்ளார்.

அதேவேளை ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சர்ஜய் லவ்ரோவ் இந்த செயல்திறன் மிக்க அணுகுமுறை இருதரப்பிற்கும் நன்மை பயக்கும் ஒத்துழைப்பிற்கு சிறந்த அடித்தளமாக அமையும் என்றும் கூறி உள்ளார்.

ரில்லசன் அவர்கள் 500 பில்லியன் டொலர் எரிபொருள் ஆய்வு உடன்படிக்கை ஒன்றை ரஷ்ய தலைவர் புட்டின் அவர்களுடன் செய்து கொண்டிருந்தார். ஆனால் ரஷ்யா கிறிமியாவை தன்னுடன் இணைத்து கொண்டதன் விளைவாக, தற்போதைய அதிபர் பராக் ஒபாமா அவர்கள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தார். அதனால் இந்த ஒப்பந்தம் தடைப்பட்டு போய் இருந்தது.

ஒபாமாவின் இந்த செயற்பாட்டை நடைமுறைக்கு உதவாத பயனற்ற செயற்பாடாக ரில்லசன் அன்று கூறி இருந்தார். ஆனால் கடந்த தேர்தல் பரப்புரைக் காலத்தில் ட்ரம்ப்,  தாம் பதவிக்கு வந்தால் ரஷ்யா மீது இருக்கும் தடையை நீக்க இருப்பதாக குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

ஆனால் இன்று அதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் தன்மை ஏற்பட்டுள்ளதை பல்வேறு அமெரிக்க காங்கிறஸ் உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புட்டின் அவர்களுடன் ட்ரம்ப் அவர்கள் அரசியல் உறவு வைத்துக் கொள்வதானால் புட்டின் அவர்களின் இசைக்கு ஏற்ப நடனமாட வேண்டும். அவர் என்ன நலன்களை தந்தாலும் ஏமாற்றினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் நெஞ்சிலே பதக்கங்களை சூட்டிவிடுவார். ஆனால் குற்றம் காண்பவராகவே இருப்பார். அதற்கு ஏற்றாற்போல் நாமும் விளையாட வேண்டும். எமது மரியாதை, சட்டமுறைமை, மனிதஉரிமை, சர்வதேச சட்டம் ஆகியவற்றை விட்டு கொடுத்து அவர் போடும் தங்க நாணயங்களை எங்களுடைய சுயமரியாதையை மறந்து பொறுக்கி கொள்ளவேண்டும் என்று POLITICO சஞ்சிகை கருத்து கட்டுரை வெளியிட்டுள்ளது

அதேவேளை சீன அமெரிக்க உறவின் எதிர்காலம் குறித்த தெரிவில் ஐயோவா மாநில ஆழுனர் ரெரி பிரான்ஸ்ரெட் அவர்களை தெரிவு செய்ததன் பின்னனியை ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் பரப்புரையில் சீனாவுக்கு எதிரான கருத்துகளை கூறிஇருந்தாலும் தூதுவர் தெரிவில் ஒரு மென்போக்கு தன்மையை கடைப்பிடித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

ரெரி பிரான்ஸ்ரெட் அவர்கள் சீன மக்களின் மிகப்பழைய நண்பனாக கருதும் சீன தலைவர்கள் சீன அமெரிக்க உறவில் அவர் முக்கிய பாத்திரம் வகிக்க உள்தாகவும் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ்ரெட் அவர்கள் டொனால்ட் டரம்ப் அவர்களின் கருத்து வெளிப்பாடுகளுக்கு பின்பு பதவி ஏற்க இருப்பது மிகவும் கடினமான ஒரு பணியாக கருதப்படுகிறது.

டொனால்ட் டரம்ப் அவர்களின் பேச்சுகளில் சீன பொருட்களின் இறக்குமதி என்பது ஒருவகையில் சீனா  எம்மை கொள்ளையிடுவதற்கு சமனானது என்றும், சீனாவுக்கு எதிரான அதீத இறக்குமதி வரியை நடைமுறைப்படுத்த இருப்பதுடன் பல்வேறு வியாபார சட்டமுறைகளை அமுலாக்க வேண்டும் என்பதிலும் அரசுகளால் ஊட்டம்பெற்ற தனியார் நிறுவனங்கள் மீதும் தடை நடவடிக்கைகள் மேற்கொள்ள  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.

ரெரி பிரான்ஸ்ரெட் அவர்களின் நியமனத்தை சீனா குறித்த துல்லியமான ஆய்வுகளில் ஈடுபடும் அமைப்பான Kissinger Associates இன் பதில் தலைவர் மெச்சி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

rex-putin

அதேவேளை உலக வங்கியின் முன்னைநாள் தலைவரும் அமெரிக்க பதில் வர்த்தக பிரதிநிதியும், பதில் இராஜாங்க  செயலருமான  Robert Zoellick என்பவர் Financial Times  பத்திரிகையில் “ட்ரம்ப் அவர்களினால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அபாயக்கட்டத்தை எட்டி உள்ளது” என எழுதிய கட்டுரையில் இரண்டாம் உலகப்போரின் பின் உருவாக்கிய கட்டமைப்பின் பிரகாரம் அமெரிக்கா சர்வதேச நிலைமைகளை கையாண்டு வருகிறது. இந்த கட்டமைப்பு தற்போது  ட்ரம்ப் அவர்களின் தெரிவின் பின் அபாயக்கட்டத்தை அடைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய உலக நிலவரம் அமெரிக்கப் பார்வையில் எவ்வாறு இருக்கிறது என்பதை அவர் தெளிவுபட குறிப்பிட்டு இருந்தார். புதிய யுத்தகளம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் எட்டக் கூடிய பயங்கரவாதத்தை அடித்தளமாக கொண்டது, ஐரோப்பாவில் மத்திய கிழக்கு மக்களின் இடப்பெயர்வால் நிலையற்ற தன்மை தோன்றி உள்ளது. மேலும் எகிப்து, சவுதி அராபியா, ஈரான் போன்ற நாடுகளில் புதிய சந்தை பொருளாதாரம் நோக்கிய மாற்றங்கள் தோல்வியில் முடிவடைந்து, மேலும் எழுச்சிகளை நோக்கி உள்ளன. இந்த நிலையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவை தெரிவு செய்த ட்ரம்ப் அவர்கள் எத்தகைய பாதையை தெரிந்தெடுப்பார் என்பது மிகப்பெரிய கேள்வி என அந்த கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது.

மேலும் மாசல் திட்ட காலத்திலிருந்து அத்திலாந்திக் சமுத்திரம் கடந்த மூலோபாய திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிணைப்பு பிரிவு கண்டு வருகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையை கைப்பற்றும் வகையில் ரஷ்யா தனது அதிகாரத்தை மத்திய கிழக்கிற்கும் ஐரோப்பாவிற்கும் இராணுவ பலம் கலந்த முறையில் நீட்டியிருக்கிறது. கொலை மிரட்டல்கள், இணையத் தாக்குதல்கள், பிழையான தகவல் பிறழ்வுகள் என்பன இவற்றில் அடங்கும்.

ரஷ்யத் தலைவர் விளடிமிர்  புட்டின் தெற்கு ரஷ்ய பகுதியை இஸ்லாமிய அபாயத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு  ஐரோப்பிய செல்வாக்கை தடுப்பதற்கும் அமெரிக்காவை போட்டி அதிகாரங்களுக்கு உள்ளே ஆன கட்டமைப்புக்குள் கட்டுப்படுத்தவும் முயற்சிக்கிறார்.

அதேவேளை ஆசியாவின் மூலோபாய கேள்வி என்னவெனில், சீனா பிராந்திய மேலாதிக்க நிலையை உரிமை கோருகிறதா அல்லது  தற்போதைய உலக ஒழுங்கிற்கு ஏற்ப பீஜிங் தனது அதிகாரத்தையும்  நலனையும் பிரதிபலிக்க விரும்புகின்றதா என்பதுவே. பழுத்த இராஜதந்திரியும் யதார்த்த அரசியல் மூலோபாயவாதியும் சீன இராஜதந்திரத்தில் அனுபவம் பெற்றவருமாகிய ஹென்றி கீசிங்சர் அவர்களின் பார்வையில் சீனா ஒரு பங்களிப்பு செய்யும் அரச ஒழுங்கையே விரும்புகிறது என்பதாகும்.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க தலைவர், அமெரிக்க தலைமையிலான பசுபிக் கரை  ஒத்துழைப்பு நாடுகளை கைவிடும் போக்கை கொண்டிருப்பதுடன், அந்த இடத்தை நிரப்பும் பொருட்டு ஆசிய-பசுபிக் பொருளாதார கூட்டு மாநாட்டிற்கு சீன தலைவர் சீ ஜின்பிங் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இன்றைய உலகம் மிகவும் ஆயத்த நிலையில் உள்ளது. அமெரிக்க சமிக்ஞைகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. தலைவர்கள் பதவி ஏற்கும் பொழுது அந்த தலைவர்களின் குழுவின் நடவடிக்கைகள் சோதனைகளை எதிர் நோக்குவது வழக்கம். அந்த குழுவின் பதில் நடவடிக்கைகள் அமெரிக்க நலன் குறித்த மூலோபாய கட்டமைப்பை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பது மேலைத்தேய ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது.

ஆனால் பொதுவாக ஆங்கிலேய, அமெரிக்க பத்திரிகைகள் தெரிவு செய்யப்பட்ட தலைவர் ட்ரம்ப் மீது அதீத அழுத்தத்தை பிரயோகிப்பனவாகவே உள்ளன. அவரது தேசிய பாதுகாப்பு குழு தெரிவில் நம்பிக்கை கொண்ட பார்வை பொதுவாக இல்லை என்றே கூறலாம்.

லண்டனில் இருந்து லோகன் பரமசாமி