இந்த சட்டமன்ற தேர்தல் தான் தி.மு.க.வுக்கு கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்- நடிகை விந்தியா

317 0

தற்போதைய தி.மு.க.வில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு செத்துப்போய் விட்டது என்று நடிகை விந்தியா கூறினார்.

மதுரையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், அ.தி.மு.க. பேச்சாளருமான விந்தியா பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவனியாபுரம், பெத்தானியாபுரம், சோலை அழகுபுரம், ஊமச்சிகுளம் ஆகிய இடங்களில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கொம்பு வைத்த காளைகளை தெம்பு வைத்த காளையர்கள் அடக்கும் இடம் இந்த அவனியாபுரம். அதைப்போல வருகிற சட்டமன்ற தேர்தலில் கொம்பு உடைந்த தி.மு.க. என்கிற காளையை அ.தி.மு.க.வினர் அடக்கும் இடம் இது. தேர்தல் வந்தவுடன் கெட்டப் போட்டு கிளம்பி விடுவார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். தி.மு.க. கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. எந்த கட்சியிலாவது அடிமட்ட தொண்டர்கள் முதல்-அமைச்சர் ஆக முடியுமா?

ஆனால் அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டராக இருந்தவர் தற்போது முதல்-அமைச்சராக உள்ளார். ஆனால் தி.மு.க.விலோ மன்னர்கள் காலத்தை போல வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்தவர் அண்ணா. ஆனால் தற்போதைய தி.மு.க.வில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு செத்துப்போய் விட்டது.

மக்கள் நலமுடன் வாழ தேவையான அனைத்தையும் செய்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்தீர்கள். அவர்கள் இந்த 2 வருடங்களில் மக்களை திரும்பி வந்து பார்த்தார்களா? சாதாரண ஏழை மக்களுக்கு நல்லாட்சியை தருவது அ.தி.மு.க. ஆட்சி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.அய்யப்பனை ஆதரித்து நடிகை ஆதரித்து நடிகை விந்தியா டி.கல்லுப்பட்டி, பேரையூர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, அ.தி.மு.க. வினரை கண்டு தி.மு.க.வினர் மரண பீதியில் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் கொடுத்தது. அ.தி.மு.க. மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளது. இந்த தேர்தல் தி.மு.க.விற்கு கடைசி தேர்தலாக இருக்க வேண்டும் என்றார்.

பின்னர் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கத்தை ஆதரித்து நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார்.