மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

300 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் தொடங்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறான செய்தியை பரப்பி வருகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஹள்ளி போன்ற பகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து ஓசூர் பத்தல பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஓட்டலில் இரவு தங்கினார். பின்னர் இன்று காலை முதல்- அமைச்சர் ஓசூர் ராயக்கோட்டை பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி. ஓசூர் தொகுதி வளர்ச்சி பெற இந்த பகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரியுங்கள். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்கள் நாட்டு மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள். நாடு வளம் பெற உழைக்கும் தலைவர்கள்.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், அவர்களின் வாழ்க்கை சிறக்கவும் பாடுபட கூடிய தலைவர்கள் நமது கூட்டணியில் உள்ள தலைவர்கள். ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றாக இணைந்து இன்றைய தினம் நாம் களத்தில் இறங்கி உள்ளோம்.

அ.தி.மு.க. கூட்டணி அருமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி ஆகும். அதே நேரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்களுக்கு நல்லது செய்வதற்காக அவர்கள் கூட்டணி அமைக்கவில்லை. நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தந்தது அ.தி.மு.க.அரசு. மக்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த ஓசூர் நகரை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். எந்த மூலையில் உள்ள மக்களை கேட்டாலும் ஓசூரை பற்றி கூறுவார்கள். தொழிற்சாலைகள் நிறைந்த இந்த ஓசூரில் தொழில் தொடங்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிடவும் கழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

புதிய தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. அன்றைய தினம் ஓசூர் பகுதிக்கு டி.வி.எஸ். உள்பட 4 நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடியில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 13 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

அதன்பிறகு 2019-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது 304 தொழிற்சாலைகள் தமிழகம் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதே ஓசூரில் டாடா நிறுவனம் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் தொழி தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 18 ஆயிரத்து 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்துடன் மேலும் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. இவ்வாறு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்போது இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஓசூர் பகுதிக்கு மட்டும் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏராளம்.

ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோ புதிய தொழில் தொடங்க அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறான செய்தியை பரப்பி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கும்போது இந்த பகுதியில் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ஓசூர் மாநகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரம். பெங்களூரு நகரம் அருகாமையில் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. எனவே இந்த பகுதியில் ஓசூர் ஜூஜூவாடி முதல் பேரண்டப்பள்ளி வரையில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.220 கோடியில் சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த சாலை அமைக்கப்படும்போது ஓசூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்து விடும்.

அதே போல ஓசூரில் புதிய பஸ் நிலையம் தொடங்கவும் நடவடிக்கை எடுப்போம். கொடியாளம் அணைக்கட்டில் இருந்து 50 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த பகுதியில் ரூ.20 கோடியில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் மலர் ஏற்றுமதி விவசாயிகள் பயன் பெறுவார்கள். மேலும் 20 ஏக்கர் நிலத்தில் காய்கறி மார்க்கெட் ஏற்படுத்தி தரப்படும்.

ஓசூர் சுற்று வட்டார மக்களுக்காக கழக ஆட்சியில் 7 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓசூர் பகுதி ஏழை, மாணவ, மாணவிகள் கல்வியில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவால் புதியஅரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது.

இந்த பகுதியில் சில இடங்களில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக கூறினார்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இந்த பகுதி முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு கிடைக்கும். கடந்த 2006-2011-ம் ஆண்டு திமு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. இந்த பகுதியில் தொழில்கள் பாதிக்கப்பட்டன.

பின்னர் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக மின் தடை நீங்கி இன்று தமிழகம் மின் மிகை மாநிலமாக விளங்குகிறது. கொரோனா காலத்திலும் ரூ.60 ஆயிரம் கோடியில் புதிய முதலீட்டுகளை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு. கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டினார்.

ஓசூர் பகுதி மக்களுக்கு மேலும் திட்டங்கள் கிடைக்க வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் தருமபுரி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதையடுத்து பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம், அரூர் தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு சென்று இன்று மாலை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து தமிழக முதல் அமைச்சர் இறுதியாக ஒடசல்பட்டி கூட்டு ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டு சேலம் செல்ல உள்ளார்.