பிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரோனா பரிசோதனை- கலெக்டர் தகவல்

327 0

தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீசுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை கடந்த 18-ந்தேதி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அவருடன் மாநில துணை செயலாளர் சுதீஷ், அ.ம.மு.க. பிரமுகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு நடந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் சுதீஷ் பங்கேற்றார். இதையடுத்து சென்னை சென்ற சுதீசுக்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் கேட்டபோது, சுதீசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து, அவர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ய உள்ளனர்.
இது பற்றி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, சுதீசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய நபர்கள், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து உள்ளோம். எத்தனை பேர் என்ற விவரம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்வோம் என்றார்.