சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. உரிய சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறிய அவர் கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில், கருணாநிதிக்கு சளித் தொல்லை, மற்றும் தொண்டை தொற்று நோயால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் கடந்த 15ம் தேதி இரவு 11.10 மணிக்கு அதே மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள், கருணாநிதிக்கு தொண்டையில் தொற்று, மூச்சு திணறலுக்கான சிகிச்சையை அளித்து வருகிறார்கள். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கருணாநிதியை ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, செல்வி, செல்வம், அமிர்தம், தயாநிதி மாறன், கனிமொழி, மு.க.தமிழரசு மற்றும் குடும்பத்தினர் கவனித்து வருகிறார்கள். கருணாநிதி உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தொண்டையில் தொற்று காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு மூச்சு விடுவதை எளிதாக்குவதற்கான டிரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது என்று கூறப்பட்டது.இந்த நிலையில், கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை 9.35 மணிக்கு கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு வந்தார். காலை 11.15 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்தார். அங்கு இருந்து கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு 11.35 மணிக்கு வந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி உடனிருந்தனர்.
மருத்துவமனையில் திமுக பொருளாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். பின்னர் டாக்டர்களிடம், கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடம்அங்கிருந்த அவர் பின்னர் காரில் விமானநிலையம் சென்று, தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த ராகுல் காந்தியுடன் மு.க.ஸ்டாலினும் வந்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறுகையில், நாட்டின் மூத்்த தலைவர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரை சந்திக்க வேண்டும் என்று நான் கொண்டிருந்த ஆர்வம் இன்று நிறைவேறியிருக்கிறது. அவர் விரைவில் குணமடைய எனது கட்சி தலைவர் வாழ்த்துகளையும், என் வாழ்த்துகளையும் தெரிவித்தேன் என்றார்.பின்னர் அவரிடம், ‘நீங்கள் கருணாநிதியை நேரில் பார்த்தீர்களா?’ என நிருபர்கள் கேட்டதற்கு, ஆம். ‘நான் கருணாநிதியை நேரில் பார்த்தேன். அவருக்கு ‘ஹலோ’ கூறினேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தேன். அவர் நல்ல முறையில் குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது என பதிலளித்தார்.
முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே. ரங்கராஜன், முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, த.மா.கா தலைவர்களில் ஒருவரான ஞானதேசிகன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நலம் கேட்டறிந்தனர்.பகல் 1.20 மணிக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர். அவர்களுக்கு துரைமுருகன், கனிமொழி ஆகியோர் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விளக்கினர்.
பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:திமுக தலைவர் உடல்நலம் தேறி வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி உடல் நலம் தேறி விரைவில் வீடு திரும்ப அதிமுக சார்பிலும் சின்னம்மா சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
ஜனாதிபதி, கவர்னர் விசாரித்தனர் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கவர்னர் வித்யாசாகர் ராவ், கேரள கவர்னர் சதாசிவம் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். முன்னதாக நடிகர்கள் சத்யராஜ், நாசர், பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கதிரவன், கொங்கு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் நேரில் வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
கருணாநிதி உடல்நலத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தொலைக்காட்சி, மடிக்கணினி மூலம் அன்றாட அரசியல் நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். திரைப்படங்களை பார்த்து ரசிக்கிறார். இயல்பாக சுவாசிக்கிறார். இன்னும் 3 தினங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.