குற்றப்பின்னணி வேட்பாளர்கள் தங்கள் விவரங்களை 26ம் தேதிக்குள் வெளியிடவேண்டும் – தேர்தல் ஆணையம்

334 0

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் தேர்தலை நடத்த தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் அது குறித்த விவரங்களை மார்ச் 26-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குற்றப் பின்னணியைக் கொண்ட வேட்பாளா்கள் வாக்குப் பதிவுக்கு முன்பாக 3 முறை அதுகுறித்த விவரங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.

முதல் முறையாக மார்ச் 23 முதல் 26-ம் தேதிக்குள்ளாகவும், இரண்டாவது முறையாக மார்ச் 27 முதல் 30-ம் தேதி வரையிலும், மார்ச் 31 முதல் ஏப்ரல் 4 வரையிலும் என மொத்தம் மூன்று தடவைகள் குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும்.

இதற்கென படிவம் சி1 உள்ளது. இந்தப் படிவத்தில், நிலுவையில் உள்ள வழக்கு விவரம், எந்த நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, குறைந்தபட்சமாக விதிக்கப்பட்ட தண்டனை விவரம் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தப் படிவத்தை பூா்த்தி செய்து அதனை அப்படியே பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இதுகுறித்த விவரத்தை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.