குடும்ப அட்டை, சாதி சான்று பெறுவதற்கும் லஞ்சம்

284 0

குடும்ப அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட அரசின் சேவைகளை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலை உள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் முடக்கப்பட்ட ரூ.48 லட்சத்தை விடுவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஸ்வரி வழக்குத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், நிலம் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.48 லட்சத்தை, ஊழல் செய்ததன் மூலம் சம்பாதித்தது என்று கூறி போலீசார் முடக்கிவிட்டனர். எனவே, பணத்தை முடக்கிய போலீசாரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், ஊழல் வழக்கு கீழ்கோர்ட்டில் சாட்சி விசாரணை முடிவடையாமல் நிலுவையில் உள்ளதால், பணத்தை விடுவிக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ரூ.48 லட்சத்தை முடக்கியதை எதிர்க்கும் மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

ஆனால், கீழ்கோர்ட்டில் 13 ஆண்டுகளாக ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருப்பது, ஊழல் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே வீழ்த்திவிடும். இதுபோன்ற வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பது துரதிருஷ்டவசமானது.

நீண்டகாலத்துக்கு ஊழல் வழக்குகளை நிலுவையில் வைத்திருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கக்கூடும். ஊழல் வழக்குகளில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை அரசுத் தரப்பு உறுதி செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலை உள்ளது வேதனைக்குரியது.

எனவே, ஊழலைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.