யாழ்ப்பாணத்தில் சுகாதார உலகநிதி உதவி மூலம் வேலைத்திட்டங்கள்-முன்னாள் போராளிகளின் உழைப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது

317 0

downloadயாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார உலகநிதி உதவி மூலம் சுகாதார வேலைத்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மலேரியா காச நோய் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய்களுக்கெதிரான சுகாதார உலகநிதி உதவி மூலம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கான வெளிநோயாளர் பிரிவு சங்கானை மற்றும் வேலணை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கான தங்குமிட வசதி மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரிக்குரிய அலுவலகம் மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கான கிளினிக் மண்டபம் ஆகிய 5 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்குரிய குறித்த சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் மத்திய அரசாங்கத்தின் மூலம் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ பொறியியல் பிரிவினால் நிறைவேற்றப்படவுள்ளதாக இராணுவ பொறியியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவ பொறியியல் பிரிவானது முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களில் கட்டிட வேலைகளில் பயிற்சி பெற்றவர்களையும் இணைத்து குறித்த 5 வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

வேலைத்திட்டங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் நாளாந்தம் வேதன அடிப்படையில் மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் இந்த ஐந்து வேலைத்திட்டங்களும் 2017ஆம் ஆண்டு யூன் மாதத்திற்கு முன்பதாக முடிக்கப்படவேண்டும்.
இவற்றுள் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரிக்குரிய அலுவலகக் கட்டிட வேலைத்திட்டத்தினைத் தவிர ஏனைய வேலைத்திட்டங்களை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.