80 படுக்கைகளுடன் புதிய சிகிச்சை மையம் : ஒரு நாளைக்கு 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

408 0

கோவை மாநகராட்சி சார்பில் ஒருநாளைக்கு 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக நகர்நல அதிகாரி தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் குறைய தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை மாநகராட்சி நகர்நல அதிகாரி ராஜா கூறியதாவது:-

கோவை மாநகராட்சி சார்பில் 32 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங் களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது அம்மா மினி கிளினிக்கில் இன்று (நேற்று) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதன்மூலம் ஒருநாளைக்கு 3,500 பேருக்கு மாநகராட்சி மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

மாநகராட்சியில் வசிக்கும் 10 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டால் 30 முதல் 40 சதவீதம் வரை ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும். எனவே மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.

மாநகராட்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு காந்திபுரத்தில் மாநகராட்சி திருமண மண்டபத்தை 80 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையை அதிகரித்து உள்ளோம்.

இதன்படி நாள்தோறும் 2 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதன்மூலம் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப்படுவதன் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படுகிறது.சிங்காநல்லூர், நெசவாளர் காலனி, மசக்காளிபாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், கணபதி, டாடாபாத், பூசாரிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள அம்மா மினி கிளினிக்குகளில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முகக்கவசம் அணியாத நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக் காத நிறுவனங்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.