வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ்

410 0

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மானிப்பாயைச் சேர்ந்த தாய், மகள் உட்பட யாழ்ப்பாணத்தில் 6 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப் பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 304 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவரும் தொற்றாளராகக் கண்டறியப்பட்டனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தோற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த தாய்க்கும் மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணம் நகர நவீன சந்தை வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் 21 வயது இளைஞன் ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில்
கொரோனா நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் 15 வயதுச் சிறுமிக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மரக்கறி சந்தையில் சிலரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் பெண் வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பரந்தனைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.