இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கு உதவுமாறு தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
குறித்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு,
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோரி தென் ஆபிரிக்காவுக்கான மேன்முறையீடு
தென் ஆபிரிக்காவானது உலகின் அதிகாரம்மிக்க நாடுகளில் ஒன்றாகவும், இனவொதுக்கலின் வலிக்கு உட்பட்டும், சர்வதேச விவகாரங்களில் ஈடுபாட்டைக் கொண்டும் உள்ளதுடன் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த புரந்துணர்வையும் கொண்டுள்ளதால், ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரினேக்றோ மற்றும் வட மசிடோனியா ஆகிய நாடுகளால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட “பூச்சிய வரை” என அழைக்கப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோருகின்ற மேன்முறையீட்டின் பொருட்டு இதனை நாம் வரைகிறோம்.
இந்நாடுகள் இத்தீர்மானத்தை வரைந்தபோது பாதிக்கப்பட்டோரை கலந்தாலோசிக்கக் கூடவில்லை என்பதுடன் அவை தன்னிச்சையாக வரையப்பட்ட இப் “பூச்சிய வரைவு” தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இணைந்த மேன்முறையீகளையும் புறக்கணித்துள்ளன.
பாதிக்கப்பட்டோராகவும்பாதிக்கப்பட்டோரின் பிரதிநிகளாகவும் “பூச்சிய வரைவு” தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு தங்களிடம் நாம் மேன்முறையீடு செய்கிறோம்.
இப் “பூச்சிய வரைவு” தீர்மானமானது இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் புரியப்பட்ட தமிழ் மக்களை கொத்துக் கொத்தாகக் குன்று குவித்தமை மற்றும் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியமை அடங்கலான கொடூரமான குற்றங்களினால் பாதிக்கப்பட்டோரின் அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும் பூர்த்தி செய்யவில்லை.
இந்நிலவரத்தின்தீவிரத் தன்மையின் காரணமாக தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு மாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இவ்வழைப்பானது வடக்கு-கிழக்கு சிவில் சமூகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி (P2P) வரைஎன்றழைக்கப்பட்ட அண்மைய பேரணியில் பங்குபற்றிய பல்லாயிரக் கணக்காக தமிழர்களினால் மேலும் வலுச்சேர்க்கப்பட்டிருந்தது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடுதலானது கொடூரமான குற்றங்களைப் புரிந்தோர் நீதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழிகோலுவதுடன் மாத்திரமல்லாது, அது இலங்கையின் அரசியற் தலைவர்களும் பாதுகாப்புப் படைப் பிரதானிகளும் தாம் நீதிக்கு முகங்கொடுக்கத் தேவையில்லை என்பதை நன்கறிந்து கொண்டு, எதுவிதத் தயக்கமும் இல்லாமல் தமிழ் மக்களிற்கு எதிரான சர்வதேசக் குற்றங்களைப் புரிவதற்கான துணிச்சலையும் ஏற்படுத்திவிடும். எனவே இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடப்படின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளவல்ல இந்த அபாயத்தைத் தீவிரமாகக் கவனத்திற் கொள்ளுமாறு நாம் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தற்போதய உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை மாதம் 27ம் திகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஐ.நா. மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் உயர் ஆணையாளர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா. நிபுணர்கள் மற்றும் இலங்கை சம்பந்தமான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் குழுவின் சகல உறுப்பினர்களும் அடங்கலாக இருபது முன்னாள் ஐ.நா. அதிகாரிகள் “யுத்த விதைகளை விதைத்தல்” எனத் தலைபிபிடப்பட்டு 2021ம் ஆண்டு மாசி மாதம் 18ம் திகதி வழங்கிய தமது அறிக்கையில் இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
“…இலங்கையானது தனது நீதித்துறை நிறுவனங்களை அதனுடைய பாதிப்புற்றோரிற்காகச் செயற்பட முடியாதவையாக ஆக்கியுள்ளது என்பதே கருத்திற் கொளள்ளப்பட வேண்டிய விடயமாகும். எனவே, சர்வதேச அல்லது வெளிப்புற நியாயாதிக்கத்தினூடாக நீதியை நிலைநாட்டுவதன் பொருட்டு பாதிப்புற்றோருக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்குமாகப் பணியாற்றுவதற்காக உயர் ஆணையாளரின் பரிந்துரைகளை நாம் மீள வலியுறுத்துகிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற பொறுப்புக்கூறலுக்கான வர்வதேச வழிவகைகள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்” எனக் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களிற்கு எதிராகப் புரியப்பட்டுள்ள
சர்வதேசக் குற்றங்களின் சில உதாரணங்கள்
1. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பொறுப்புக்கூறுதலுக்கான நிபுணர்கள் குழுவினுடைய 2011ம் ஆண்டு பங்குனி மாத அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுதந் தாங்கிய யுத்தத்தின் இறுதி நிலைகளின் போது போர்க் குற்றங்களும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதாகவும் 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மரணித்துள்ளதாகவும் நம்பத்தகு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2. இலங்கை மீதான நடவடிக்கை தொடர்பான ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையின் பிரகாரம் 2009 ம் ஆண்டின் இறுதிக் கட்ட யுதத்தத்தின் போது 70,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற் போயுள்ளனர்.
3. அரசாங்கத்தால்யுத்த சூனிய வலயங்கள் (பாதுகாப்பு வலயங்கள்) எனக் குறித்தொதுக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கைப் படையினர் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்களையும் எறிகணை வீச்சுக்களையும் மேற்கொண்ட போது பலர் கொல்லப்பட்டனர்;. வைத்தியசாலைகள் மற்றும் உணவு விநியோக நிலையங்களின் மீது கூடக் குண்டுகள் வீசப்பட்டன. பலர் பட்டினியின் காரணமாக இறந்ததுடன் மருத்துவ சிகிச்சையின்மையால் குருதிப்பெருக்;கேற்பட்டும் மரணித்தனர்.
4. 2017ம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ஐரீஜேபீ), தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கற்பழிப்பு முகாங்கள் பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது.
5. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, இலங்கையில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்தமூல விதவைகள் உள்ளனர்.
6. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐநாவின் பணிக்குழுவானது உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கை இலங்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சர்வதேசக் குற்றங்களுக்குரிய பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொய்யான வாக்குறுதிகளின் வரலாறு
அடுத்துவந்தஇலங்கை அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHCR) தீர்மானங்களை அமுற்படுத்தத் தவறியுள்ளமையையும் தங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர நாம் விரும்புகிறோம்.
முன்னய அரசாங்கமானது அது இணையனுசரணை வழங்கிய தீர்மானத்தை அமுற்படுத்துவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது மாத்திரமல்லாது, முரணாக சனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் தாம்
UNHCR தீர்மானத்தை அமுற்படுத்த மாட்டோம் எனத் திரும்பத்திரும்பவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போதய புதிய அரசாங்கமானது ஒரு படி கூடுதலாகச் சென்று தீர்மானங்கள் 30/1, 34/1 மற்றும் 40/1 களுக்குரிய இணையனுசரணையிலிருந்து விலகியுள்ளதுடன் யூஎன்எச்ஆர்சீ பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்தும் வெளிநடப்புச் செய்துள்ளது.
மேலும், UNHCR இனை இழிவுபடுத்தும் விதமாக, சிறுவர்கள் அடங்கலாக பொதுமக்களைக் கொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு படைச்சிப்பாயும் தற்போதய சனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.