எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று புதன்கிழமை முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 10ஆம் திகதி ஆரம்பமான 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை மார்ச் 25 மற்றும் 26ஆம் திகதி ஆகிய தினங்களில் தொடர்வதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
மார்ச் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய பின்னர் 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எழுப்பப்படும் 10 கேள்விகளுக்காக இந்நேரம் ஒதுக்கப்படும்.
அதன் பின்னர் முற்பகல் 11 மணி முதல் மாலை 4.30 மணிவரை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10ஆவது சரத்தின் கீழ் இறக்குமதி வரி குறித்த பிரேரணை, ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அன்றையதினம் மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதமும் இடம்பெறும் என தம்மிக்க தஸநாயக்க குறிப்பிட்டார்.
மார்ச் 24ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முற்பகல் 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அதன் பின்னர் மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறும்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மார்ச் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் மீண்டும் நடைபெறும்.
மார்ச் 25ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளபோதும், மார்ச் 26ஆம் திகதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும் 27(2) நிலையியற் கட்டளையின் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்படாது முற்பகல் 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை முழு நேரமும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்துக்கு ஒதுக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், அன்றைய தினத்துக்காக ஒத்திவைக்கப்படும் வாய்மூல கேள்விகள் குறித்து எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியதற்குப் பதிலளித்த சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைகளுக்கான கேள்விகளுக்குப் பதில் வழங்குவதற்காக எதிர்வரும் தினம் ஒன்றை அல்லது இரண்டு தினங்களை ஒதுக்குவதாகவும் கூறினார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.