மு.க.ஸ்டாலின் சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரனை ஆதரித்து வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்தார்.
அங்கு அவருக்கு சேலம் வடக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும், மத்திய மாவட்ட தி.மு.க செயலாளருமான வக்கீல் ஆர்.ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் கார் மூலமாக அங்கிருந்து சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதிக்கு வந்தார். செவ்வாய்பேட்டை முக்கோணப் பகுதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது மு.க.ஸ்டாலின், சேலம் வடக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரனை ஆதரித்து வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
செவ்வாய்பேட்டை பகுதியில் மளிகை கடைகள், வங்கிகள், வியாபார நிறுவனங்கள், வீடுகள் நிறைந்துள்ளன. வியாபாரிகள், பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார். மேலும் ஒவ்வொரு கடைகளிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது கடைக்காரர் ஒருவர் மு.க.ஸ்டாலினுக்கு குளிர்பானம் கொடுத்தார். வாக்கு சேகரிப்பின்போது மு.க.ஸ்டாலினுடன் இளைஞர்கள், பெண்கள் பலர் உற்சாகமாக செல்பி எடுத்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அவர்களிடம் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுமாறு ஆதரவு திரட்டிய படி நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அவருடைய திடீர் வருகையில் செவ்வாய்ப்பேட்டை கடை வீதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.