ஈஸ்டர் தாக்குதல்-சஹரானின் சகோதரி உட்பட 64 பேருக்கும் விளக்கமறியல்

463 0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சகோதரி உட்பட 64 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தபோதே அவர்களை எதிர்வரும் 29 திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சஹரான் குழுவோடு தொடர்புடைய குற்றச்சாட்டிலும் ஹம்பாந்தோட்டை, நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார், குண்டுதாரிக்கு பஸ்வண்டி ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.