மக்களின் ஆதரவுடன் அ.ம.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- தினகரன்

364 0

இலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும், மக்களின் ஆதரவுடன் அ.ம.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும் டி.டி.வி.தினகரன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளரும், கோவில்பட்டி தொகுதி வேட்பாளருமான டி.டி.வி.தினகரன் நேற்று மாலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் நான் (டி.டி.வி.தினகரன்) நாளை (அதாவது இன்று) மதியம் 1.30 மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். கோவில்பட்டி தொகுதி மக்கள் எனக்கு வெற்றியை தருவார்கள் என்று நம்புகிறேன்.
தமிழக அரசுக்கு ரூ.5. 70 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், இலவச திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும். இலவசங்கள் தருகிறேன் என்று மக்களை ஏமாற்றுவதை விட, வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கினால் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
மக்கள் தன்னிறைவுடன் வாழ வேலைவாய்ப்பை உருவாக்கி தருவது அவசியம். மக்களின் ஆதரவுடன் அ.ம.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்று தரும்.
அ.ம.மு.க. தலைமையில் தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். தற்போதுள்ள மது தொழிற்சாலைகளை படிப்படியாக மூடுவோம். புதிய மது தொழிற்சாலைகளை தொடங்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளோம்.
தேர்தல் அறிக்கையில் உள்ள 100 திட்டங்களில் பூரண மதுவிலக்கை முக்கியமான திட்டமாக அறிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் டி.டி.வி.தினகரன் சாமி தரிசனம் செய்தார்.