மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.ஆனால் இந்த வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என குற்றம்சாட்டி வந்த அந்த நாட்டு ராணுவம் கடந்த மாதம் 1-ந் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.அது மட்டுமின்றி நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் என ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் ராணுவம் அதிரடியாக கைது செய்தது.கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக ரகசியமான இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது ராணுவம் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கோர்ட்டில் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் ராணுவமும் போராட்டக்காரர்கள் மீதான தங்களது அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதை ராணுவம் வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கும் மியான்மார் நாட்டுக்கும் இடையே 1643 கிலோமீட்டர் எல்லை உள்ளது. தற்போது மியான்மர் நாட்டில் ராணுவ அத்துமீறல் நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை 116 மியான்மர் அகதிகள் இந்தியாவுக்குள் அந்நாட்டு ராணுவத்திற்கு பயந்து நுழைந்துள்ளனர். இவர்கள் தவிர 8 மியான்மர் காவலர்களும், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவர்களை இந்திய காவலர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.மியான்மர் நாட்டு காவலர்களையும் அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குவதாக காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுவரை 116 அகதிகள் ராம்லியானா கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். அம்மாநிலத்தின் டியூ ஆற்றை கடந்து இவர்கள் படகுமூலம் இந்தியா வந்து சேர்கின்றனர் என இந்திய வெளியுறவுத்துறை ஓர் தகவலை வெளியிட்டு உள்ளது.