ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் ஒரு குழுவினரை மட்டும் வெளிப்படுத்தி, அரைகுறையான வேலையை செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், கட்சி தவைவர் என்ற ரீதியில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பது எனது கடமை என்பதால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அபேசிங்கவுடன் சென்றேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்ற விசாரணை பிரிவில் வாக்குமூலமளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய கொழும்பிலுள்ள குற்ற விசாரணை பிரிவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்கவுடன் சென்ற சஜித்பிரேமதாச, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “பயங்கரவாதிகளை வழி நடத்தி வந்தவர்கள் யார்?, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்தும் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அடையாளம் காண ஆணைக்குழு தவறிவிட்டது.
தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு இன்றும் கவலையிலுள்ள மக்களுக்கு வழங்கக் கூடிய ஒரே நீதி, பிரதான குற்றவாளிகள் யார் என்பதை கண்டு பிடிப்பதாகும்.
ஆனால் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் இதனுடன் தொடர்புடைய ஒரு பகுதி மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் பிரதான சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதே தற்போதைய தேவையாகும்.
69 இலட்சம் வாக்குகளை வழங்கி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களும் இதனையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எத்தகைய நிவாரணத்தை வழங்கினாலும் உயிரிழந்தவர்களை மீள உயிர்ப்பிக்க முடியாது. எனவே உண்மையை அடிப்படையாகக் கொண்டு ஒழுக்கமான விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கான நீதியை நிலைநாட்ட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.