கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண், மறுநாளான இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் தொற்றே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது சடலம், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய இன்று பிற்பகல், யாழ்ப்பாணம்- கோம்பயன்மணல் இந்து மயானத்தில் மின் தகனம் செய்யப்படும் என வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தவர்களுக்கு ஏற்பட்ட தொற்றில் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணே, இவ்வாறு உயிரிழந்தார்.
பருத்தித்துறை தும்பளை தெற்கைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 23ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர், நொச்சிகாமம் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்து கடந்த 25ஆம் திகதி, யாழ்ப்பாணம்- கோப்பாய் கல்வியற் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர், நேற்று வீடு திரும்பினார். எனினும் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டது.
குறித்த சம்பவத்தையடுத்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின்படி அவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனால் வயோதிபப் பெண்ணின் சடலத்தை மின்தகன மைதானத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு இதுவாகும்.