கொழும்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையைத் தேடும் பணியில் ´பெனி´!

266 0

கொழும்பு – டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ள படல்கும்புர 5ஆம் தூண் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸ் நாய் பிரிவின் ´பெனி´ என்ற நாயை ஈடுபடுத்தி குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வாழைத் தோட்டமொன்றில் இரத்தக் கறைக்கு ஒத்த அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் ´பெனி´ நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கடந்த முதலாம் திகதி பகல் கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையிலிருந்து யுவதியின் தலையில்லாத சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலம் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டமை தெரியவந்தது.

பயணப் பையை வைத்துச் சென்ற நபர் ஹங்வெல்ல பகுதியிலிருந்து 143 பேருந்தில் அதனை எடுத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டைப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் 52 வயதுடைய புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நபர் விஷமருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேநேரம், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.