இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நம்பமுடியாத பல கூற்றுகளை முன்வைத்துள்ளார்

258 0

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்விற்கான உரையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நம்பமுடியாத பல கூற்றுகளை முன்வைத்துள்ளார், விடுதலைப்புலிகளை சுட்டிக்காட்டி இலங்கை குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சரின் அறிக்கை குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன 2015 மற்றும் 2019 இல் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானங்களில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் இ;ந்த தீர்மானங்களுக்கும் 2017 மார்ச்சில் இன்னுமொரு தீர்மானத்திற்கும் இணை அனுசரணை வழங்கியது.வெவ்வேறு காலப்பகுதிகளில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் தீர்மானத்தின் பயணவழி முடிவடைந்துவிட்டது.இன்னொரு அரசாங்கம் அரசின் சார்பில் அதிலிருந்து விலக முடியாது.

வெளிவிவகார அமைச்சர் ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையை மீண்டும் நிராகரித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை அந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆணையாளருக்கு ஆணை வழங்கியது என்பதை அவர் கவனிக்க தவறிவிட்டார்.

மனிதஉரிமை பேரவையின் பல உறுப்புநாடுகள் அந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அவருக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறியதாக காணப்படவில்லை மாறாக சர்வதேச கடப்பாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் தொடர்பில் இலங்கையின் தவறுகளை அது சரியாக சுட்டிக்காட்டியுள்ளது.

உரிய நடைமுறைகளை பின்பற்றி மனித உரிமை நிலவரங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது ஐக்கியநாடுகளின் சட்டபூர்வமான நடவடிக்கை,இது இலங்கையின் இறைமையை அல்லது ஆள்புல ஒருமைப்பாட்டை மீறும் செயல் இல்லை.

இலங்கைவெளிவிவகார அமைச்சர் நம்ப முடியாத பல கூற்றுகளை முன்வைத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் தொடர்புபடுத்துவது அதிலொன்று. ஆனால் ஆயுதமோதலின் போது பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களிற்கு என்ன நடந்தது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.குறிப்பாக மோதலின் முடிவில் பலரின் முன்னிலையில் படையினரிடம் சரணடைந்தவர்களுககு என்ன நடந்தது என்பதற்கு அவர் விளக்கமளிக்கவில்லை.

உண்மையை உறுதிப்படுத்தி நீதியை வழங்குவதற்காக இலங்கை எந்தவித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. இந்த பின்னணியில் இங்கிலாந்து தலைமையிலான முகன்மை குழு மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் நிறைவேற்றுவதற்கான தீர்மானமொன்றை முன்வைத்துள்ளது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகளிடம் எமது மக்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

விடுதலைப்புலிகளை சுட்டிக்காட்டுவதன மூலம் இலங்கை குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது,சுதந்திரத்திற்கு பின்னர் சுமார் 30 வருடங்களாக நியாயபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள் மீது அரசபயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.பெருமளவு தமிழ்மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

விடுதலைப்புலிகள் அதன் பின்னரே தோற்றம் பெற்றனர், ஜனநாய தமிழ் தலைவர்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு தோன்றியிராது.