தோட்டங்களை இராணுவ வசப்படுத்தும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது – இராதாகிருஷ்ணன்

365 0

மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

‘சம்பள நிர்ணய சபை 1000 ரூபா விடயத்தில் தலையிட்டதனால் இன்று வித்தியாசமாக தோட்ட துறைமார் தொழிலாளர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஹோல்டன் மற்றும் கந்தப்பளை தோட்டங்களில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தோட்ட துறைமார் வீதியில் இறங்கிப் போராடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பிரதிபலிப்பாக தற்போது ஹய்போரஸ்ட் மாகுடுகல தோட்டத்தில் 6 இராணுவத்தினர் தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்கத் தயாராவதாக அறிய முடிகின்றது. இது தொடர்பில் மகுடுகல தோட்ட நிர்வாகத்தினரிடம் வினவியதற்கு தமக்கு அதுதொடர்பில் தெரியாது என்கின்றனர். இவ்வாறு இராணுவத்திடம் தோட்ட நிர்வாகத்தை ஒப்படைப்பது பூதாகரமானது.

கடந்த காலங்களில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவமயமாக்கலை கொண்டுவந்ததன் மூலமே யுத்தம் ஏற்பட்டது. ஆகவே தொழிலாளர்களை நசுக்க கம்பனிகளும், அரசாங்கமும் முற்படுகிறதா? என்ற சந்தேகமுள்ளது.

ஆகவே அரசாங்கம் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும்.

தற்போதைய நிலையில் 1000 ரூபாவை கொடுத்து ஏனைய நலன்புரி விடயங்களில் கம்பனிகள் கைவைத்தால் மலையகத்தில் பெரும் தொழிற்சங்கப் போராட்டம் இடம்பெறும். இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும்- என்றார்.