கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் காலி கலந்துரையாடலின் முக்கியத்துவம்!

361 0

galle_dialogue_2016-3காலி கலந்துரையாடல்’, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படை ஆகியன இணைந்து நடத்திய ஒரு வருடாந்த அனைத்துலக கடல்சார் கருத்தரங்கு ஆகும். கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற ஏழாவது காலி கலந்துரையாடலானது ‘கடல்சார் கூட்டுப் பங்களிப்பு தொடர்பான மூலோபாயத்தை மேம்படுத்துதல்’ என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

கடற்படை உயர் அதிகாரிகள் தொடக்கம் முன்னணி மூலோபாய ஆய்வாளர்கள் வரை பல்வேறு தரப்பினரும் இக்கருத்தரங்கில் உரைநிகழ்த்தினர். இவர்களில் சிலர் இந்திய-பசுபிப் பிராந்தியத்திற்குள் கடல்சார் பாதுகாப்பைப் பரிமாறுதலும் கலந்துரையாடல்களை நடத்துதலும் என்கின்ற தலைப்பில் உரையாற்றினர்.

அனைத்துலக வர்த்தகம் மற்றும் கடல், கரையோரக் கண்காணிப்பு கப்பல்கள் தரித்து நிற்பதற்குமான கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்திலுள்ள சிறிலங்காவானது, தனது பிராந்திய கடல் சார் விவகாரங்களில் பங்களிப்பதில் எவ்வளவு முக்கியத்துவம் மிக்கது என்கின்ற விடயம் தொடர்பாகவும் காலி கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

தற்போது கொழும்புத் துறைமுகமானது இந்திய மாக்கடலின் ஊடாகப் பயணிக்கும் 70 சதவீதக் கப்பல்களை கையாளுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, 95 வெளிநாட்டு போர்க் கப்பல்கள் சிறிலங்காவின் துறைமுகங்களில் தரித்து நின்றுள்ளன. இதற்கும் அப்பால், புலிகள் அமைப்பின் கடற்புலிகளை எதிர்த்துப் போரிட்ட சிறிலங்கா கடற்படையின் அனுபவமானது இப்பிராந்தியத்திற்கான பெறுமதிமிக்க ஒரு சொத்தாகக் காணப்படுகிறது.

இலங்கைத் தீவின் வெளியுறவுக் கொள்கை வகுப்புக் கணிப்புக்களில் பெருமளவில் செல்வாக்குச் செலுத்தும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் உரை நிகழ்த்தினர். இந்தியக் கடற்படைத் தளபதி  அட்மிரல் சுனில் லன்பா மற்றும் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படை உதவித் தளபதி றியர் அட்மிரல் வாங் டசோங்க் ஆகியோரின் உரைகள் அதிகம் கவனத்திற் கொள்ளப்பட்டன.

சார்க் அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காகவும் இந்தியப் பிரதமர் மோடி பாடுபடுவதாகவும் இப்பிராந்தியத்தில் ‘முதலில் அயல்நாடுகள் கோட்பாடு’ என்கின்ற பிராந்திய நட்புக் கோட்பாட்டையும் பிரதமர் அமுல்படுத்தியுள்ளதாகவும் இந்தியக் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா குறிப்பிட்டார். இந்திய மாக்கடலின் கடற்படைக் கருத்தரங்கு என்கின்ற குடையின் கீழ் இப்பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பானது கட்டிவளர்க்கப்படுவதாகவும் அட்மிரல் லன்பா பரிந்துரைத்தார்.

galle_dialogue_2016-3

இவரது இக்கருத்தானது இந்திய மாக்கடலின் கடற்படைக் கருத்தரங்கு போன்ற பல்வேறு ஒத்துழைப்புப் பொறிமுறைகள் நடைமுறையில் பயன்படுத்தப்படுவதுடன் இந்திய மாக்கடல் பிராந்தியத்துடனான அனைத்துச் செயற்பாடுகளும் தனது அதிகாரத்தின் கீழேயே இடம்பெறவேண்டும் என்பதையும் இந்தியத் தளபதி வலியுறுத்தினார்.

இதேவேளை, பொதுவான பாதுகாப்பு, முழுமையான பாதுகாப்பு, ஒத்துழைப்புப் பாதுகாப்பு, நிலைத்தன்மையுள்ள பாதுகாப்பு போன்றவற்றை மையப்படுத்திய கடல்சார் பாதுகாப்பையே சீனா வலியுறுத்துவதாகவும் இதற்காக சீனக் கடற்படையானது அளப்பரிய பங்காற்றுவதாகவும் சீனக் கடற்படைப் பிரதி தளபதி  றியர் அட்மிரல் வாங் தெரிவித்தார்.  ஏடன் வளைகுடாவில் இடம்பெற்று வரும் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்துவது உட்பட சீனக் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பாகவும் வாங் தெரிவித்தார்.

2016ல் மட்டும், 38 நாடுகளைச் சேர்ந்த 310 இற்கும் அதிகமான கப்பல்களை சீனக் கடற்படை தரித்து நிற்பதற்கு ஒழுங்கு செய்ததாகவும் 83 நாடுகளுக்கு கிட்டத்தட்ட 200 வரையான கப்பல்களை சீனக் கடற்படை அனுப்பி வைத்ததாகவும் வாங்க் குறிப்பிட்டார்.

21ம் நூற்றாண்டின் கரையோர பட்டுப் பாதைத் திட்டமானது மாக்கடல்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதையும் துரித வளர்ச்சியை எட்டும் சீனப் பொருளாதாரத்தை இத்திட்டம் அமுல்படுத்தப்படும் நாடுகளின் அபிவிருத்தி நலன்களுக்காகச் செலவிடுவது போன்ற பல்வேறு இலக்குகளையும் கொண்டுள்ளதாக றியர் அட்மிரல் வாங் தெரிவித்தார்.

2015ல் சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகம் பொறுப்பேற்றது தொடக்கம் மேற்குலக நாடுகளுடனான சிறிலங்காவின் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளது என்பதை காலிக் கலந்துரையாடல் வெளிப்படுத்தியது.

எடுத்துக்காட்டாக, 2011ன் பின்னர் முதன்முதலாக 2016ல் நான்கு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் சிறிலங்கா துறைமுகத்திற்கு வருகை தந்ததாக அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ் தெரிவித்தார்.

இந்திய மற்றும் பசுபிக் மாக்கடல்கள் நடவடிக்கை மற்றும் வர்த்தக செயற்பாடுகளுக்காக ஒன்றிணைத்து செயயற்படுவது மிகவும் முக்கியமானது எனவும் இக்கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.

‘ஏ’ என்கின்ற ஒரு நாட்டினால் ‘பி’ என்கின்ற நாட்டில் கட்டப்படும் துறைமுக கொள்கலனானது ‘சி’ என்கின்ற நாட்டின் வர்த்தகத்தை பிற நாடுகளுடன் தொடர்புபடுத்துவதற்குத் தேவையான வர்த்தக சார் கடல் கட்டுமாணங்கள் தொடர்பாகவும் இதில் ஆராயப்பட்டது. இதற்கும் மேலாக, கடல்சார் ஒத்துழைப்புச் செயற்பாடுகள் மூலம் கடலில் எழக்கூடிய பல்வேறு அச்சுறுத்தல்களையும் முறியடிக்க முடியும் எனவும் கூறப்பட்டது.

குறிப்பாக தகவல் பரிமாற்ற ஏற்பாடுகள், பொறிமுறைக் கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கை, நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய திறன் அபிவிருத்தி மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மாறிவரும் பூகோள-அரசியல் மாற்றத்திற்கு ஈடாக இந்திய-பசுபிக் பிராந்தியத்தை எவ்வாறான ஒத்துழைப்புக்களை மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்பற்ற பொறிமுறைகளின் விளைவுகளானது பரந்தளவில் தாக்கத்தைச் செலுத்துவதற்கு வழிவகுத்தாலும் கூட, ஏற்கனவே உள்ள பொறிமுறைகளை விரிவாக்கி அவற்றின் மூலம் புதிய முயற்சிகள் புகுத்தப்பட வேண்டும் எனவும் காலி கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள பிராந்திய பாதுகாப்பு உறவுகள் மற்றும் பொருளாதார இணைச்சார்புகள் போன்றவற்றின் வலைப்பின்னலானது உத்தியோகபூர்வமாக முரண்பாட்டைக் களையக் கூடிய நிலையில் இருந்தாலும் கூட, இந்த நாடுகளுக்கு இடையிலான அதிகரித்து வரும் சிக்கலானது இந்த வலைப்பின்னலில் பிளவை ஏற்படுத்துவதற்கு சில நாடுகள் திட்டம் தீட்டுவதற்கும் காலாக இருக்கலாம்.

கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புக் கலாசாரத்தைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட காலி கலந்துரையாடல் போன்ற ஒன்றியங்கள் காணப்பட்டாலும் கூட, காலமும் மோதலும் மட்டுமே இவ்வாறான அமைப்புக்கள் நெருக்கடிகளைக் கையாள்வதில் எத்தகைய ஆளுமைத் திறன்களைக் கொண்டுள்ளன என்பதைக் கூறும்.

ஆங்கிலத்தில்  – Rajni Gamage
வழிமூலம்       – The diplomat
மொழியாக்கம் – நித்தியபாரதி