ஜனாசா நல்லடக்கம் முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே தீர்மானிக்க வேண்டும் .அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடுஎன ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
முஸ்லிம் மக்களினுடைய ஜனாசா நல்லடக்கம் பற்றிய விடயத்தை தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய தாகவே அரசாங்கம் ஆக்கி வருவது கண்டனத்துக்குரியது. அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவது போல பாசாங்கு காட்டி அதைத் தொடர்ந்தும் நிறைவேற்றாது கேள்விக்குறியாக வைத்திருக்கின்ற அரசின் நிலைப்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
அரசாங்கம் தாங்கள் நினைத்த இடங்களில் தங்கள் வசதிக்கு ஏற்ப முஸ்லீம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறிய செயலாகும். இரணை தீவிலே நல்லடக்கம் செய்ய முற்படுவதும் இதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
மாறாக முஸ்லிம் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி ஜனாஸாக்களை எங்கு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எட்டுவது தான் அந்த மக்களுடைய கோரிக்கையை கௌரவமான முறையில் நிறைவேற்றுவதாக அமையும்.
ஏற்கனவே மன்னாரில் நல்லடக்கம் செய்ய முற்பட்டு அது வெற்றி அளிக்காமல் போன நிலைமையிலே மீண்டும் இரணைத்தீவை தேர்ந்தெடுத்திருப்பது இன முறுகலை தோற்றுவிக்கின்ற நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும் இது சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தும் நடவடிக்கை. ஒரு முஸ்லீம் இறந்து 24 மணித்தியாலத்திற்குள் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய பிரதான கோரிக்கையாக அமைந்திருக்கிறது.
பொது இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு நல்லடக்கம் செய்ய முற்படுகின்ற பொழுது நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் இழுத்தடிப்பை ஏற்படுத்துவதோடு அந்த குடும்பங்கள் அந்த இடங்களுக்குச் சென்று தமது முறையை பின்பற்றுவது இலகுவான காரியமாக இருக்கப்போவதில்லை.
இப்படியான இழுத்தடிப்பு செய்வதையும் மற்றவர் கலாச்சார முறைகளை அரசே தீர்மானிப்பதை தவிர்த்து குறித்த இனத் தலைவர்களோடு பேச்சுவார்த்தையை நடத்தி நாடு முழுவதும் ஜனாஸா நல்லடகத்துக்கான பொது விதிமுறையை கையாள்வதன் மூலம் தான் இதற்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதோடு அந்த மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமையும். தவிர இப்படியான நடவடிக்கைகளால் முடிவுகள் எட்டப்படாது. ஆகவே அரசாங்கம் பாசாங்கு செய்வதைவிட சரியான தீர்வினை முஸ்லீம் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முன்னெடுப்பதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொடுக்கும். இதற்கு அரசு ஆவன செய்ய செய்ய வேண்டும்