உலகில் மிகவும் பாதுகாப்பான நகரமாக துபாய் திகழ்கிறது- சுற்றுலாத்துறை அதிகாரி பேச்சு

233 0

கொரோனா பரவலுக்கு இடையே துபாய் நகரம் உலகில் மிகவும் பாதுகாப்பான நகரமாக திகழ்ந்து வருகிறது என சுற்றுலாத்துறையின் பொது இயக்குனர் ஹிலால் சயீத் அல் மர்ரி பேசினார்.

சுற்றுலாத்துறை, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், முக்கிய ஓட்டல்களின் உயர் அதிகாரிகள் ஆகியோர் துபாயில் சந்தித்து பேசினர். கூட்டத்தில் கொரோனா பரவல் காலக்கட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பான வர்த்தகத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் துபாய் அரசின் சுற்றுலாத்துறையின் பொது இயக்குனர் ஹிலால் சயீத் அல் மர்ரி பேசியதாவது:-

துபாய் நகரம் உலகில் மிகவும் பாதுகாப்பான நகரமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் இருந்த போதும் சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

துபாய் நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு துறைகளிலும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிகள் சரியாக கடைப்பிடித்து வருவதால் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் துபாய் நகருக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு சில நாடுகளில் தற்போது கூட விமான பயணத்திற்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இத்தகைய நிலையில் சுற்றுலாத்துறையில் பொருளாதார மேம்பாட்டை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

முக்கியமாக சுற்றுலா மையங்களில் பாதுகாப்பு விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஓட்டல்களிலும் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க அமீரகத்தில் தடுப்பூசி போடும் பணியானது மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதன் மூலம் இந்த பணியை செய்து வரும் உலக நாடுகளில் முதல் ஐந்து இடத்தை அமீரகம் வகிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற துபாய் விமான நிலையங்களின் தலைமை செயல் அதிகாரி பால் கிரிப்த்ஸ் கூறுகையில், “துபாய் விமான நிலையங்களில் பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயணிகளுக்கு ஒருவித நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையம் உலக விமான போக்குவரத்தில் மேம்பாடு அடைந்து, தற்போது 80 நாடுகளின் 146 நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நகரங்களுக்கு 56 விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகிறது” என்றார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.