அமெரிக்காவின் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசியைப் பரிசீலிக்க இலங்கை தயார்!

201 0

அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஒரு டோஸ் அளவு ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (johnson & johnson) தடுப்பூசியை பரிசீலிக்க இலங்கை தயாராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு டோஸ் அளவு ஜோன்சன் அன்ட் ஜோன்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த தடுப்பூசிக்கு இலங்கை தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஒப்புதல் வழங்கப்பட்டால் அது பரிசீலிக்கப்படும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளன.

தடுப்பூசியின் செலவு குறைவாக உள்ளது என்றும் தடுப்பூசியை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுவரை தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஜோன்சன் அன்ட் ஜோன்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பம் கிடைக்கவில்லை என்று அந்த சபையின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் கமல் ஜெயசிங்க தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் பாரத் பயோடெக், ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி மற்றும் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி மற்றும் இந்தியாவின் உள்நாட்டு கொவிட் -19 தடுப்பூசி ஆகியவற்றைப் பயன்படுத்த ஒப்புதல் கோரி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.