குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைப்பு

339 0

downloadதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவராக செயற்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இதன்படி, குறித்த மனு எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த மனுவை மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தாக்கல் செய்துள்ளதுடன், அந்த மனுவின் ஊடாக பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலி அமைப்பின் செயற்பாடுகளுடன்  தொடர்புடைய குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் வேண்டுமென்றே தவறி வருவதாக அந்த மனுவில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இதனால், குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தனது மனுவின் ஊடாக கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அரசாங்க மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்;.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு நடாத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றமையினால், மனு குறித்து ஆராய்வதற்கான தேவை கிடையாது என சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தின் முன்னிலையில் விடயங்களை தெளிவூட்டியுள்ளார்.