சம்பள விவகாரம் – சம்பள நிர்ணயசபை இன்று மீண்டும் கூடுகிறது

214 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணயசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபாயை வழங்க வேண்டுமென சம்பள நிர்ணய சபையில் கடந்த 8ஆம் திகதி  தீர்மானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதில் 200க்கும் அதிகமான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன.

அதன் பின்னர், இந்த ஆட்சேபனைகளை விசாரணை செய்வதற்காக கடந்த 19ஆம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடியது.

எனினும் அன்றைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் 8 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி மாத்திரமே பங்கேற்றிருந்தார்.

எனவே, கூட்டத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமை காரணமாக குறித்த தினத்தில் கூட்டத்தை நடத்தாமல் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.