கடந்த நவம்பர் மாதத்தில் பாரிய குற்றச் செயல்கள் குறைவு- பொலிஸ் தலைமையகம்

313 0

crime-reportபாரிய குற்றச் செயல்கள் சம்பங்களில் கடந்த நவம்பர் மாதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் கடந்த நவம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் மாத்திரம் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 7592 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பொலிஸ் தலைமையகம் அறிவிக்கவில்லை.

இந்த விடயம் குறித்து பொலிஸ் தலைமையகத்தை தொடர்புக் கொண்டு கேட்டப் போது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் வகையிலான தகவல்கள் தம்வசம் கிடையாது என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டின் கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 575 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, 39 மனித படுகொலைகள், 198 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள், 153 வீட்டுக் கொள்ளை சம்பவங்கள், 64 ஏனைய பாரிய கொள்ளை சம்பவங்கள் மற்றும் 121 திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 90 பாரிய குற்றச் செயல்களில் குறைவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த ஆண்டின் கடந்த நவம்பர் மாதத்தில் அதிகளவிலான குற்றச் செயல்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அதன் தொகை 170 என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் நுகேகொடை பொலிஸ் பிரிவிலேயே அதிகளவிலான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

மேலும், கடந்த மாதத்தில் மாத்திரம் 198 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 152 சம்பவங்கள் பெண்களுக்கு எதிரானவை என கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், இந்த குற்றச் செயல்கள் எந்த காலப் பகுதியில் இடம்பெற்றமை என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் தலைமையக தகவல்கள் குறிப்பிடுகின்றன.