தேர்தலின்போது 3-வது அணி உருவானாலும் தமிழகத்தில் எப்போதும் இருதுருவ போட்டிதான் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. பா.ஜனதா தலையீடு உள்ளது. இதை அவர்கள் தேர்தலை அறிவித்ததில் இருந்து அறியமுடிகிறது. மேற்குவங்கத்தில் தமிழகத்தை விட 60 சட்டசபை தொகுதிகள் தான் அதிகம். ஆனால் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த உள்ளனர். வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு என்பது தேர்தலுக்கு நடத்தப்பட்ட நாடகமாகத்தான் தெரிகிறது. இதேபோல கடன் தள்ளுபடி அறிவிப்பும், தேர்தல் நாடகமாகவே உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக நம்மால் அறிய முடியும். ஒவ்வொரு தேர்தலிலும் 3-வது அணி உருவாகும். ஆனால் எப்போதுமே இருதுருவ போட்டிதான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.