ஈழத் தமிழ் உறவுகளுக்கு 2009ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு செய்த பச்சைத் துரோகம் குறித்து அவர் முதல்வராக இருந்த சமயத்தில் விலாவாரியாக எழுதியிருக்கிறேன். அதற்காக கலைஞர் மீது அபிமானம் கொண்ட நண்பர்கள் என் மீது பாய்ந்ததுண்டு. சிலர் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிவுரை சொன்னதுண்டு. இப்போது மீண்டும் அதேபோன்ற நிலை.
சென்ற வாரம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பில் ஒரு கட்டுரை (தேவதையின் பிரகடனம்) எழுதியிருந்தேன். கட்டுரையின் ஒரு பகுதி சில நண்பர்களை மீண்டும் கோபப்படுத்தியிருக்கிறது.
‘2009ல் ஈழத்தில் தமிழினப் படுகொலையை இலங்கை அரசு திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டிருந்த சமயத்தில் இங்கேயிருந்து அதை பராக்கு பார்த்துக் கொண்டிருந்த ஓர் அரசின் கையாலாகாத்தனம் கண்டு கொதித்தவர்கள் நாம்’ என்று எவர் பெயரையும் குறிப்பிடாமல் நாகரிகமாகத் தான் எழுதியிருந்தேன். இதற்கே ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள் நண்பர்கள்.
‘கையாலாகாத்தனம் – என்பது மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகம்’ என்பது ஒரு நண்பரின் குற்றச்சாட்டு. ‘கை கால்களில் விலங்கு போட்ட கோபத்தில் இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படியெல்லாம் எழுதிக் கொண்டிருப்பீர்கள்’ என்பது வேறொரு நண்பரின் கேள்வி. (இந்தக் கேள்வியை ஏற்கெனவே பலமுறை எழுப்பியவர்தான் அவர். நான்தான் பதில் சொல்வதைத் தவிர்த்தேன்.)
‘கையாலாகாத்தனம்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மிகவும் பொருத்தமான ஒரு காரணம் இருந்தது இருக்கிறது. நண்பர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் 96 தொகுதிகளிலேயே தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. 96 பேரை வைத்துக்கொண்டு முதல்வராக முடியுமா? அந்த நிலையில் கருணாநிதிக்குக் ‘கை’கொடுத்தது 34 எம்.எல்.ஏ.க்களைக் கையில் வைத்திருந்த காங்கிரஸ் கட்சிதான்! காங்கிரஸின் தயவில் கலைஞர் முதல்வரானார். அதே காங்கிரஸ்தான் ஈழத்தில் தமிழினப்படுகொலையை நடத்த ராஜபக்சவுக்குக் கை கொடுத்தது. நன்றிக்கடன் காரணமாக காங்கிரஸின் அந்த நயவஞ்சகத்தைப் பராக்கு பார்க்க முடிந்ததே தவிர முழுமூச்சோடு எதிர்க்க முடியவில்லை கருணாநிதியால்! இது கையாலாகாத் தனமின்றி வேறென்ன?
இதைப் பற்றி உரிய ஆதாரங்களுடன் நிறைய எழுதியிருக்கிறேன் பேசியிருக்கிறேன். இன்று அது கலைஞராலேயே கூட மறுக்க முடியாத அளவுக்கு ஊரறிந்த ரகசியம். கூறியது கூறல் குற்றமென்பதால் மீண்டும் அதை விவரிக்கப் போவதில்லை அது தேவையுமில்லை.
‘கை கால்களில் விலங்கு போட்ட கோபத்தில் எழுதுகிறாயா’ என்கிற கேள்விக்கு மட்டுமே நான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. பலமுறை தவிர்த்திருக்கிறேன் என்றாலும் இந்தமுறை அதைப் பேசியாக வேண்டும். ஏனென்றால் இப்படிக் கேட்கிற நண்பர் என் திரைப்படப் பயணத்தில் ஓர் இக்கட்டான கட்டத்தில் எனக்குத் துணை நின்றவர் அப்போது கலைஞர் அரசின் அணுகுமுறையைக் கண்டு வெகுண்டவர்.
அது புத்தாயிரம் ஆண்டான 2000-ம் ஆண்டு. விடுதலைப் புலிகளைப் போற்றுகிற படம் – என்கிற குற்றச்சாட்டுடன் என்னுடைய ‘காற்றுக்கென்ன வேலி’ திரைப்படம் தடை செய்யப்படுகிறது. தணிக்கைக் குழுவின் முடிவை எதிர்த்து டெல்லி டிரிப்யூனலில் மேல் முறையீடு செய்கிறோம். படத்தைப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய டிரிப்யூனல் தேவையில்லாமல் காலங்கடத்துகிறது. அந்தத் திட்டமிட்ட இழுத்தடிப்பைக் கண்டித்து சென்னையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறேன். 4வது நாள் நள்ளிரவில் கைது செய்யப்படுகிறேன். தற்கொலை முயற்சி – என்பது என்மீதான குற்றச்சாட்டு.
உண்ணாவிரதம் இருப்பவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு போடுவதும் வழக்கமான சட்ட நடைமுறை. அதை நாம் குறை சொல்வதற்கில்லை. சட்டம் அப்படி!
நான் கைது செய்யப்பட்டது தீபாவளி தினம் தொடங்குகிற ஒரு நள்ளிரவில்! அந்த நள்ளிரவிலும் பிலிம் சேம்பர் வளாகத்தில் திரண்டிருந்த நண்பர்கள் போலீசாரின் கைது நடவடிக்கையை எதிர்க்கவில்லை. கூடுதல் போலீசாரைக் கொண்டுவந்து குவித்து வீண் பதற்றத்தை ஏற்படுத்திய விரும்பத்தகாத நடவடிக்கையை மட்டுமே அவர்கள் கண்டித்தனர். அப்போது என்ன நடந்ததென்பது மூத்த இயக்குநர் வி.சி.குகநாதன் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த நள்ளிரவிலும் எங்களுடன் இருந்தவர்கள் அவர்கள்.
பிலிம்சேம்பர் வளாகத்தில் என்னைக் கைது செய்த காவல்துறை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபிறகுதான் பிரச்சினை தொடங்கியது. இத்தனைக்கும் காவல்துறை வாகனத்தைப் பின்தொடர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்த நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும் உடல்நலப் பரிசோதனைகள் முடிவடையும்வரை அவர்களிடமிருந்து ஒரு சின்ன முணுமுணுப்பு கூட எழவில்லை.
உடல்நலப் பரிசோதனைகள் முடிவடைந்த பின் நண்பர்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றது காவல்துறை. நண்பர்களோ மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்படும்வரை அங்கிருந்து போவதாக இல்லை. வேறு வழியில்லாமல் மருத்துவமனையின் பின்புறமுள்ள வார்டு ஒன்றுக்கு என்னை அழைத்துச் சென்றனர். நண்பர்களும் விடாப்பிடியாக எங்களைப் பின்தொடர்ந்து வந்தனர்.
அந்த குறிப்பிட்ட வார்டின் உள்ளே என்னை அழைத்துச் சென்றதும் அதன் வெளிப்புற கேட் மூடப்பட்டுவிட்டது. இப்போது நண்பர்கள் வெளியே! நான் மட்டும் உள்ளே!
வார்டுக்குள் போனபிறகுதான் பார்த்தேன்….. அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அத்தனைப் பேரும் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தனர். நான் அதை எதிர்பார்க்கவேயில்லை. என் பின்னால் வந்த காவலரைத் திரும்பிப் பார்த்தேன். அவர் அது கிரிமினல் குற்றவாளிகளின் வார்டு என்பதையும் அவர்கள் தப்பித்து விடாதிருப்பதற்காக கால் கைகளில் சங்கிலியால் கட்டிவைப்பது நடைமுறை என்றும் விளக்கினார்.
‘உங்களது நியாயமான போராட்டம் குறித்து பத்திரிகைகளில் படித்துக் கொண்டிருக்கிறேன்….. நான் ஒரு காவலர்…. எனக்கு வேறு வழியில்லை’ என்று அந்தக் காவலர் சொன்னதற்கு என்ன அர்த்தமென்று எனக்குப் புரிந்தது. ‘நான் உங்களைத் தவறாக நினைக்கவில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்…’ என்றேன். எனக்கான படுக்கையை அவர் காட்ட அதில் நான் படுத்தவுடன்இஅவர் என் கால்களைச் சங்கிலியில் பிணைத்துப் பூட்டினார்.
வெளியேயிருந்து அந்த வார்டு ஜன்னலொன்றின் திரையைத் தள்ளிவிட்டு உள்ளே பார்த்த நண்பர் ஒருவருக்கு இது கண்ணில் பட்டுவிட்டது. கோபத்தோடு அவர் போட்ட கூச்சலில் மற்றவர்களும் முட்டிமோதி அந்த ஜன்னல் இடைவெளி வழியாகப் பார்க்க அமைதியான சூழல் முடிவுக்கு வந்தது. நண்பர்கள் ஆவேசத்துடன் முழக்கங்களை எழுப்ப அந்தக் காவலர் திகைத்துப் போய் நின்றார்.
அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனை கண்காணிப்பாளரும் மூத்தமருத்துவர்களும் வந்துவிட்டனர். காவல்துறையினருடன் அவர்கள் பேசினர். பொதுப்பிரிவுக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர். கிரிமினல் வார்டிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்டேன்.
வெளியேயிருந்த நண்பர்கள் முகத்தில் ‘காற்றுக்கென்ன வேலி’க்கான தடையையே உடைத்துவிட்டதைப் போன்ற மகிழ்ச்சி. நான்காவது மாடியிலோ ஐந்தாவது மாடியிலோ உள்ள பொது வார்டு ஒன்றில் என்னை அனுமதித்தபிறகே நண்பர்கள் புறப்பட்டார்கள். நண்பர்கள் – என்று நான் குறிப்பிடுவது இப்போது கேள்வி கேட்கிற நண்பரையும் சேர்த்தே!
என் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியடைந்ததா – என்பதைப் பற்றியும் ஹைதராபாதில் இருந்து விரைந்துவந்த மூத்த இயக்குநர் தாசரி நாராயணராவ் அதற்காக மேற்கொண்ட தீவிர முயற்சிகள் பற்றியும் தனியாக விரிவாகப் பேசவேண்டும். இங்கே அதற்கு இடமில்லை.
2000 ஆண்டு தீபாவளி தினத்தின் அதிகாலையில் நடந்தது இந்த இரும்புச் சங்கிலி சம்பவம். அதற்காக அப்போது மட்டுமில்லை இப்போதும் நான் கோபப்படவில்லை. தான் இயக்கிய ஒரு திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துப் போராடுகிற ஒருவரை கிரிமினல் வார்டில் அடைப்பதும் கையிலும் காலிலும் சங்கிலி போட்டுப் பூட்டுவதும் மிக மோசமான அவமதிப்பு என்று வருந்தினேன் அவ்வளவே!
அந்த நள்ளிரவில் எனக்காகக் குரல்கொடுத்த நண்பர் ஒருவரே இப்போது கேள்வி எழுப்புகிறார். ‘கை கால்களில் விலங்கு போட்ட கோபத்தில் இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படியெல்லாம் எழுதிக் கொண்டிருப்பீர்கள்’ என்கிறார். வேறு யாராவது இதைக் கேட்டிருந்தால் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். என்னைப் புரிந்துகொண்ட நண்பர் ஒருவரே இப்படிக் கேட்பது உண்மையாகவே வேதனை அளிக்கிறது. அதனாலேயே அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
அந்தச் சம்பவம் நடந்தபோது கருணாநிதிதான் முதலமைச்சர். அவர்மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயக்குநர் டி.ராஜேந்தர் பெருமுயற்சி எடுத்தார். அந்த முயற்சி தோல்வி அடைந்ததற்கு மறுநாள் நான் கைது செய்யப்படுகிறேன். அதைவைத்து ‘இரும்புச் சங்கிலியில் கட்டிப் போடுங்கள்’ என்று உத்தரவிட்டவரே கருணாநிதி தான் என்று குற்றஞ்சாட்டுகிற அளவுக்கு நான் மனநோயாளி இல்லை. அது அந்த குறிப்பிட்ட வார்டின் நடைமுறை. அவ்வளவுதான். கிரிமினல் வார்டில் என்னை அடைத்தது வேண்டுமானால் அரசின் விருப்பத்தை ஒட்டிய நடவடிக்கையாக இருந்திருக்கலாம்.
‘அந்தக் கோபத்தில் தானே எழுதுகிறாய்’ என்று இப்போது கேள்வி எழுப்புவது 15 ஆண்டுகளுக்கு முன் என்னை கிரிமினல் வார்டில் அடைத்ததற்கு இணையான அவமதிப்பு. அன்று அதைக் கண்டு வெகுண்ட நண்பரே இதைக் கேட்பது ஆகப் பெரிய கொடுமை. 2000-த்தில் நடந்த அந்தச் சம்பவம் தொடர்பாக இந்த 15 ஆண்டுகளில் நான் வேதனையோடு பேசியதோ எழுதியதோ உண்டா? அதற்குக் காரணமே கருணாநிதிதான் – என்று அவர்மீது பாய்ந்ததுண்டா? 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரமாயிரம் தமிழ் உறவுகள் கொல்லப்படுவதற்கு முன்பு கலைஞரைக் கடுமையாக விமர்சித்ததுண்டா?
ராயப்பேட்டை மருத்துவமனைச் சம்பவம் தனிப்பட்ட முறையில் எனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு. அதனால்தான் அதை நான் பெரிதுபடுத்தவில்லை. முள்ளிவாய்க்கால் சம்பவம் அப்படியல்ல. அது ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் இழைக்கப்பட்ட கொடுமையான அநீதி. அதனால்தான் 2009ல் கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தேன். நேர்மையான கேள்விகளை ஆதாரங்களுடன் கேட்டேன்.
காற்றுக்கென்ன வேலிக்கு முன்பு அதற்குப் பின்பு – என்கிற பார்வை ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை. முள்ளிவாய்க்காலுக்கு முன் முள்ளிவாய்க்காலுக்குப் பின் – என்றே பார்க்கிறேன். இப்போது கேள்வி கேட்கிற நண்பருக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும்.
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான தமிழகச் சூழ்நிலை எப்படியிருந்தது? சொக்கத்தங்கம் சோனியாவின் கைங்கரியத்தில் நடந்த இனப்படுகொலையைப் பராக்கு பார்த்துக் கொண்டிருந்த கலைஞரின் கையாலாகாத்தனத்தை மூடிமறைக்க இங்கே நாளுக்கொரு விழா நடத்தப்பட்டது.. அவரது துரோகத்தை மூடி மறைக்க திரைப்படத் துறையோ வேறேதாவது ஒரு துறையோ அவருக்குப் பாராட்டுவிழா நடத்திய வண்ணம் இருந்தன. ‘சகதிக்கு எதற்குத் தங்க மணிக்கிரீடம்’ என்று அதைக் கண்டித்தவர்கள் மிகச் சிலர்தான். அவர்களில் நானும் ஒருவன்.
ஆயிரமாயிரம் தமிழ் உறவுகளைச் செங்குருதிச் சேற்றில் புதைத்த தனது துரோகத்தை மறைக்க எமது தாய்மொழியைக் கூட தவறாகப் பயன்படுத்தியவர் கருணாநிதி. அதற்காகவே அவர் நடத்திய ‘செம்மொழி மாநாடு’ மொழியின் பெயரால் நடத்தப்பட்ட அப்பட்டமான மோசடி. எமது இனம் கொன்று குவிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த ஒரு மனிதர் எமது மொழியின் துணையுடன் தனது துரோகத்தை மூடிமறைக்கப் பார்த்ததை நாங்கள் எப்படி எதிர்த்தோம் என்பதை என் இனிய நண்பர்கள் மறந்துவிடக் கூடாது.
கருணாநிதியின் மொழி மோசடியைத் தோலுரிக்கத் துணிந்த மிகச் சிலருடன் நானும் நின்றேன். நெஞ்சில் நெருப்புடன் நேர்மையோடும் ஆண்மையோடும் எழுதிய கவிஞர் இன்குலாபின் கவிதை என் போன்றவர்களை எழுந்து நிற்க வைத்தது.
‘முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்துகொண்டிருக்கிறது
என் தாய்மொழி!
நினைவுப் படலத்தில் குருதிக்கோடுகளாய்ப் படர்ந்த
கொடிய நாட்கள் அவை!
வானம் மறுக்கப்பட்ட பறவைகளை
நான்கு திசைகளிலிருந்தும்
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்!
கிளிகளுக்கு இரங்குவதாய் அழுத பூனையொன்று
ஒரு சிட்டுக்குருவியின் சிறகுரிக்கும் நேரமே
உண்ணாதிருந்த
மாபெரும் போராட்ட நாட்கள்’
என்று தொடங்குகிற இன்குலாபின் கவிதை
‘அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்து விலகி
வெகுதொலைவில் முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும் செம்மொழியாய்….
என்று முடிந்து பொய்மையின் தோலுரித்தது.
‘எட்டப்பன் கருணாநிதியை
கட்டபொம்மனாகக் காட்ட
செம்மொழி மாநாடா’ என்கிற கோப ஹைக்கூவுக்காக வதைக்கப்பட்டனர் இளைஞர்களும் மாணவர்களும்!
அவர்களோடு சேர்ந்து நின்றேன்…. துரோகத்தின் தோலுரிப்பதில் இணைந்துகொண்டேன். தமிழக அரசியல் இதழ் என் ஆவேசத்தை அங்கீகரித்தது.
2009ல் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தபோது கருணாநிதி சாதித்த கள்ளமௌனத்தைக் குறித்து கேள்வி கேட்பது கருணாநிதி அரசால் சட்ட விரோதச் செயலாகவும் கருணாநிதியின் கழகத்தால் தமிழின விரோதச் செயலாகவும் பார்க்கப்பட்டது. அப்படியொரு நிலையில் அச்சமின்றி பேசிய அத்தனைப் பேரையும் அதற்காகவே மதித்தவன் நான்.
இதெல்லாம் தங்களது பதவி வெறிக்காக ஒன்றரை லட்சம் உயிர்களை பலிகொடுத்தவர்கள் மீதான தார்மீகக் கோபத்தின் விளைவு மட்டுமே! அது என்னைச் சங்கிலியில் பிணைத்ததால் எழுந்த கோபம் தான் என்று அதன் நிறத்தை மாற்ற என் நண்பர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
கலைஞர் முதல்வராக இருந்த சமயத்தில் அவரைக் கடுமையாகக் கண்டித்த நான் அவர் முதல்வர் பதவியில் இல்லாதபோது அந்த வேகத்தைக் குறைத்துக் கொண்டேன். நண்பர்கள் அதைக் கவனிக்கவே இல்லையா? இந்த நாகரிகத்தைப் பாராட்டாத நண்பர்கள் இப்படியொரு தவறான முத்திரையை என் மீது குத்த முயல்வது என்ன நியாயம்?