இம்ரான் கான் தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கை ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். பின்னர் புதன் பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம் ஜனாசாக்கள் தகனம் செய்வது தொடர்பில் பாக்.பிரதமர் இம்ரானிடம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விசனத்தை தெரிவித்தனர்.
இச்சமயம் இலங்கையில் கொரோனாவில் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயத் தகனம் செய்வது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தான் பிரஸ்தாபித்ததாகவும் விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் முஸ்லிம் எம்.பி களுக்கு தெரிவித்தார். இந்த நிலையில் புதன் மாலை அவர் மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார்.
இந்த சூழ்நிலையிலே கொரோனாவினால் மரணமடைபவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கலாம் எனும் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலை கடந்த வியாழன் நள்ளிரவு இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கொரோனாவினால் மரணமடைபவர்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையைத் தான் வரவேற்பதாக தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெறுகின்ற நிலையில், ஜனாசா அடக்கம் செய்யப்படுகின்றமைக்கு வழங்கப்பட்ட அனுமதி, அரபுநாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கமெனவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
கொவிட் 19 நோய்த்தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்காமல் இஸ்லாமியச் சடங்குகளின் பிரகாரம் அடக்கம் செய்ய முடியுமென இலங்கை அரசாங்கம் ஏற்கனவே முடிவெடுத்திருந்தது.
ஆனால் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பித்துள்ள நிலையில் அனுமதியை வழங்கினால், இலங்கை மீதான தீர்மானத்துக்கு எதிராக அரபு நாடுகளையும் பாக்கிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளையும் தங்கள் பக்கம் அணைத்துக்கொள்ள முடியுமென்ற எதிர்பார்ப்பு இலங்கைக்கு இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
முஸ்லிம்களின் ஜனாசாக்கள் இஸ்லாமிய சமய முறைப்படி அடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்பட்டதால், இலங்கைத் தீவில் வாழும் முஸ்லிம் மக்கள் பெரும் மன உழைச்சலுக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருந்தனர்.
போர்க்குற்ற விசாரணை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கையைக் காப்பாற்ற, முஸ்லிம் மக்களின் பிறப்புரிமையோடு கூடிய அந்த உணர்வுடன் ராஜபக்ச அரசாங்கம் விளையாடியிருப்பது இலங்கைத்தீவில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.