இலங்கையின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை, ஏனைய நாடுகளில் உள்ளதைப்போன்று ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்த வேண்டியதற்கான அடிப்படைக் காரணங்கள் தொடர்பில் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் முன்மொழிவுகள் அடங்கிய தொகுப்பொன்றை இவ்வாரம் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நீதியமைச்சர் அலி சப்ரிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அனுப்பி வைத்துள்ளது
நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில், நீண்ட காலமாக உணரப்படும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அவசியத்தை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் தலைமையிலான 2003ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
அத்துடன் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசனைக் குழுவால் 2006 இல் தயாரிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் தொடர்பான ஒரு வரைவையும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. மேலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் உள்ளீடுகளையும் இவ்வறிக்கை கொண்டுள்ளது.
2003 இல் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அதே பரிசீலனைகள் இன்று அதைவிட அதிக வலுவுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இலங்கையின் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டக் கோட்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டதாக அமையப் பெற்றிருக்க வேண்டும் எனவும், அதனடிப்படையில் சட்ட ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் நிகழும் அவமதிப்புக்கான சக்தியானது பாகுபாடின்றி நியாயமாக பயன்படுத்தப்பட வேண்டியதோடு, அவமதிப்புக்கான தண்டனையானது சட்டத்தால் வரையறுக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான கொள்கையாக இருக்க வேண்டும் என தாம் உணர்வதாக இலங்கை பத்திரிகை ஸ்தானமும், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில் நீண்ட காலமாக தாமதமாகிவரும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை வரைவதற்கு அரசாங்கம் விரும்புமானால், இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது தம்மால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு முன்மொழிவுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்த தயார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை பத்திரிகை சமூகம், இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியோர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஒருங்கிணைந்த பங்காளர்களாக இருக்கும் அதேவேளை, ஊடக ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடக கூட்டமைப்பு, தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பு ஆகியன அதன் இணைந்த பங்காளர்களாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.